புதன், 9 நவம்பர், 2016

கலவன் பாடசாலை ஒழுங்கும் முஸ்லிம் பாடசாலைகளும்.

ஒரு பால் பாடசாலைகள் (Single -Sex Schools) மற்றும் கலவன் பாடசாலைகள் (Mixed Schools) குறித்த கல்விப் புலத்திலான வாதப் பிரதிவாதங்கள் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு பால் கல்வி மதப் பின்னணியுடன்தான் வலியுறுத்தப்படுகிறது என்பதும் தவறானது. ஐக்கிய அமெரிக்காவில் இயங்கிவரும் NASSPE (National Association for Single Sex Public Education) எனும் அமைப்பு இரு பாலாரும் தனித்தனியாகக் கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. உளவியல் மற்றும் சமூகவியல் ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த விடயத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள். ஆண் பிள்ளைகளினதும் பெண் பிள்ளைகளினதும் மூளையின் அமைப்பு மற்றும் கற்றல் ஒழுங்கு வேறுபடுவதால் இரு பாலாருக்குமான தனித்தன்மையான கற்பித்தல் நுட்பங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்பதே அங்கு முதன்மைப்படுத்தப்படுகிறது.
அதேவேளை இதற்கு எதிரான கருத்துக்களும் முன்வைக்கப்படாமலில்லை. கலவன் பாடசாலைகள் சமூகத் திறன்களை வளர்க்கின்றன, பால்நிலை சமத்துவத்தை ஏற்றுக் கொள்ளும் சமூகச் சூழலை ஏற்படுத்துகின்றன போன்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தில் மட்டுமன்றி ஏனைய சமூகங்களினுள்ளும் இருவகையான பாடசாலை ஒழுங்குகளும் காணப்படுகின்றன. காத்தான்குடி போன்ற முஸ்லிம் பிரதேசங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. காத்தான்குடி பிரதேசத்தில் தனியான பெண் பாடசாலைகள் சற்று நீண்ட கால வரலாற்றைக் கொண்டன. ஆண்களுக்கான தனியான பாடசாலைகள் அண்மைக் காலத்தில் உருவாக்கம் பெற்றவையாகும். இந்த நகர்வில் தீவிர மதச் சார்பான கருத்துக்கள் செல்வாக்குச் செலுத்தியுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இவ்வாறானதொரு நகர்வினால் பெண்களுக்கான பாடசாலைகள் வளர்ச்சி கண்டுள்ள போதிலும் ஆண் பாடசாலைகள் வீழ்ச்சி நிலையிலேயே உள்ளன என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படாமலில்லை.

மைய நகரப் பாடசாலைகளில் இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் எல்லைக் கிராமங்களில் உள்ள உயர்தரப் பாடசாலைகளும் கலவன் பாடசாலை ஒழுங்கினையே பேணி வருகின்றன. குறைந்த மாணவர் தொகை இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். எவ்வாறு இருந்த போதிலும் மைய நகரில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை, எந்தவித கள ஆய்வுகளுமின்றி –சில மேம்போக்கான அபிப்பிராயங்களின் அடிப்படையில் எல்லைக் கிராமங்களுக்கு பிரதி செய்வது சிலவேளை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும். எல்லைக் கிராம மக்களின் சமூகவியல் ஒழுங்கு மைய நகர சமூக ஒழுங்கிலிருந்து வேறுபட்டது என்பதை சாதாரண அவதானிப்பை மேற்கொள்ளும் ஒருவரால்கூட புரிந்துகொள்ள முடியும். 

வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்படுவது போன்ற, பால் வேறுபாட்டை மையப்படுத்திய கற்பித்தல் நுட்பங்கள் பற்றிய பிரக்ஞை இலங்கையின் கல்விப் புலத்தினுள்ளே இதுவரை ஏற்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, பால் ரீதியான பாடசாலைப் பகுப்பானது கற்பித்தல் நுட்பங்களில் எவ்வாறான மாற்றத்தையும் கொண்டுவரும் என எதிர்பார்க்க முடியாது. மாணவர்களிடையே தோன்றும் ஒழுக்க ரீதியான பிரச்சினைகளுக்கு கலவன் பாடசாலைகளைக் காரணமாக்குவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. தவறான மதப் பிரச்சாரங்கள், வணிக மயப்பட்ட ஊடகங்கள், பெற்றோரினதும் ஆசிரியரினதும் தவறான அணுகுமுறைகள் என பல்வேறு சமூகக் காரணிகள் இந்த விடயத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன. பின்தங்கிய ஒரு பிரதேசத்தில் பால் ரீதியான பாடசாலைப் பகுப்பானது போட்டி நிலையை இல்லாமலாக்கி ஒரு பாலாரின் கல்வியை கடுமையாக பாதித்து விடவும் கூடும். ஒரே பாடசாலையில் காணப்படும் ஒரு பால் வகுப்புக்களைப் பேணுவது போதுமானதென்றே தோன்றுகிறது. 

கலவன் பாடசாலை ஒழுங்கையே நாம் ஆதரிக்க வேண்டும் என்பது இதன் பொருளல்ல. ஆனால், எந்தவித கள ஆய்வுகளும் பரந்த உரையாடல்களுமின்றி ஒரு சிலரின் அதிரடித் தீர்மானங்களின் அடிப்படையில் பாடசாலைகளைப் பால் வேறுபாட்டுக்கமைய பாகுபடுத்துவது உசிதமானதல்ல என்பதையே கூற வருகிறோம். சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதையாகிவிடக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக