நிகழ்வு-'நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் கமூகம்' (இஜ்திமா)
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி, காத்தான்குடி உப பிராந்தியத்தின் ஏற்பாட்டில் ஹிஜ்ரி 1434ம் ஆண்டுக்கான 'நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம்' எனும் தொனிப்பொருளிலான இஜ்திமா (ஒன்றுகூடல்) நிகழ்வு 07-06-2013 அன்று இஸர் தொழுகை முதல் இரவு 9.30 மணிவரை புதிய பாலமுனை முஹிதீன் ஜூம்ஆப் பள்ளி;வாயலில் நடைபெற்றது.
இஜ்திமா நிகழ்வுகள் பிற்பகல் 4.00 மணியளவில் அல்ஹாபிழ் ஏ.எம்.அஸ்பாக் அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமாகின. இஜ்திமா நிகழ்வுகளை மௌலவி ஜே.எம்.றமீஸ் (ஹாமி) அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். ஆரம்ப உரையாக, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்ற நாஸிம், எம்.எம்.எச்.எம்.இப்றாகீம் (ஆசிரியர்) அவர்களின் தலைமையுரை இடம்பெற்றது. தலைமையுரையினைத் தொடர்ந்து முதலாவது விசேட உரையாக, ஐ.எல்.எம்.வாஜித் (இஸ்லாஹி) அவர்களின் 'இணக்கமான வாழ்வு இனிய சுவனம்' எனும் தலைப்பிலான உரை இடம்பெற்றது. 'மனிதன் வாழ்வதற்குப் பொருத்தமானதாக அமைக்கப்பட்டுள்ள இப்பிரபஞ்சம் அற்புதமான ஒழுங்கமைப்பைக் கொண்டுள்ளது. பிரபஞ்சத்தில் காணப்படும் பிரமாண்டமான படைப்புகளெலல்லாம் அவற்றிற்கேயுரிய ஒழுங்குகளுடன் இணக்கமாகிச் செல்வதால், பிரபஞ்சத்தில் எவ்விதமான குழப்பங்களோ மோதல்களோ ஏற்படுவதில்லை. மனிதனும் தனது மனோ இச்சைக்கேற்ப வாழாமல், இறைவனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழும்போது மட்டுமே உலகுக்குப் பொருத்தமான வாழ்க்கையினை வாழமுடியும். மேற்குலகம் இறைவனின் கட்டளைகளைப் புறக்கணித்து தனது மனோ இச்சைக்கு ஏற்றவாறான ஓர் உலகை உருவாக்கியுள்ளது. அதன் பாதிப்பை இன்று அவர்களே உணரும் நிலை தோன்றியுள்ளது.' எனும் கருத்துக்களை உள்ளடக்கியதாக அவரது உரை அமைந்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, ஜம்இய்யா பறறிய அறிமுக உரை, ஜம்இய்யாவின் கிழக்குப் பிராந்திய நாஸிம், சகோதரர் ஐ.எம்.இப்திகார் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அவ்வறிமுக உரையினைத் தொடர்ந்து, முஅய்யித் பாடநெறி பற்றிய அறிமுக உரையினை அஷ;ஸெய்க் ஹூஸ்னி (நளீமி) அவர்கள் நிகழ்த்தினார்கள்.
மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து 'மனித சமூகத்தின் ஆக்கமும் அழிவும்' எனும் தலைப்பிலான விசேட உரை உஸைர் (இஸ்லாஹி) அவர்களால் நிகழ்த்தப்பட்டது. 'வாழ்வாங்கு வாழ்ந்த சமூகங்களையும் அழிந்துபோன சமூகங்களையும் பற்றிய செய்திகளை அல்குர்ஆனின் ஒளியிலும் நடைமுறை வாழ்வினூடாகவும் அறிந்துகொள்ள முடியும். ஒரு மஸ்லிம் வரலாற்று அனுபவங்களில் இருந்து படிப்பினை பெறவேண்டியவனாக உள்ளான். ஒரு தனிமனிதனிடம் காணப்படும் நல்ல சிந்தனைகள் அவனை வாழவைக்கும், கெட்ட சிந்தனைகள் அழிவைத் தேடித் தரும். இதேபோன்று, ஒரு சமூகத்திடம் காணப்படும் நல்ல சிந்தனைகள் அந்த சமூகத்தினை வாழவைக்கும், கெட்ட சிந்தனைகள் அந்த சமூகத்தையே அழித்துவிடும். அல்லாஹ் எந்த சமூகத்தையும் அநியாயமாக அழிப்பதில்லை. அழிந்துபோகும் சமூகங்கள், அழிவுக்கான காரணிகளை தன்னகத்தே கொண்டுள்ளன. வெற்றி பெறும் சமூகம் இரண்டு பண்புகளைக் கொண்டிருக்கும். முதலாவது, மனிதனுக்கு வாழும் வழிகளை இலகுபடுத்திக் கொடுக்கும் வகையில் வானத்திலும் பூமியிலுமுள்ள வளங்கள் வினைத்திறனாகப் பயன்படுத்தப்படும். இரண்டாவது, மனிதர்கள் யாவரும் சரிசமம் என்ற நோக்கில் அந்த சமூகத்தில் நீதி நிலைநாட்டப்படும். மனிதன் இம்மையிலும் மறுமையிலும் எதனைக் கொண்டு பயன்பெற முடியுமோ, அதனைச் செய்பவனே முஸ்லிமாவான்.' எனும் கருத்துக்களை உள்ளடக்கியதாக அவர்களது உரை அமைந்திருந்தது.
இஷh தொழுகையைத் தொடர்ந்து மீண்டும் இஜ்திமா நிகழ்வுகள் ஆரம்பமானபோது, முதலில் புதிய பாலமுனை முஹிதீன் ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாக சபைத் தலைவர், மௌலவி சுல்தான் (பலாஹி) அவர்களின் உரை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, கருப்பொருள் உரை பற்றிய அறிமுக உரையினை இலங்கை ஜமாஅதே இஸ்லாமி மட்டக்களப்புப் பிராந்திய நாஸிமும் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ;ட விரிவுரையாளருமான அஷ;ஸெய்க் எம்.டி.ரிஸ்வி (மஜீதி) அவர்கள் நிகழ்த்தினார்கள். உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் சுகவீனமுற்றிருப்பதால், அவர்கள் கருப்பொருள் உரையினை ஆரம்பித்துவைக்க உவைஸ் (இஸ்லாஹி) அவர்கள் அதனைத் தொடருந்து உரையாற்றுவார்கள் எனும் தகவலை அஷ;ஸெய்க் ரிஸ்வி (மஜீதி) அவர்கள் தெரிவித்தார்கள்.
அடுத்ததாக, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள், நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம் எனும் தலைப்பிலான கருப்பொருள் உரையின் ஆரம்பப் பகுதியை நிகழ்த்தினார்கள். 'இஸ்லாம் தீமை செய்யுமாறோ தீமையினை தீமையினால் எதிர்கொள்ளுமாறோ கூறவில்லை. இந்த உலகிற்கு அதிகமான நன்மைகளைச் செய்த சமூகமாக முஸ்லிம் சமூகமே உள்ளது. 'நன்மை என்பது அதனைச் செய்யும்போது உள்ளம் அமைதியடைகிறது. தீமை என்பது உள்ளத்தை உறுத்துகிறது' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மார்க்கம் என்பது எந்தப் பிரதியுபகாரமும் எதிர்பார்க்காமல் நன்மை செய்வதாகும், கூலியை அல்லாஹ்விடம் எதிர்பார்க்கவேண்டும்.' எனும் கருத்துக்களை உள்ளடக்கியதாக அவர்களது உரை அமைந்திருந்தது. அமீர் அவர்களைத் தொடர்ந்து கருப்பொருள் உரையின் இரண்டாம் பகுதியினை அஷ;ஸெய்க் உவைஸ் (இஸ்லாஹி) அவர்கள் நிகழ்த்தினார்கள். 'நன்மை என்பது மக்கள் அதன்மூலம் பயனடைவர், அதற்கான கூலி அல்லாஹ்விடம் எதிர்பார்க்கப்படும். இன்று சிறுபிள்ளைகள் கூட பிரதியுபகாரத்தை எதிர்பார்த்தே நன்மை செய்கின்றனர். இத்தகைய கலாச்சாரத்தை அபுல்ஹஸன் அலி (நத்வி) அவர்கள் 'நவீன மதமாற்றம்' என வர்ணிக்கிறார்கள். தனிமனிதனாக நின்று செய்யக்கூடிய நன்மைகளும் உள்ளன, கூட்டாகச் செய்யக்கூடிய நன்மைகளும் உள்ளன. தீமை செய்வதற்காக சாதாரண மட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை கூட்டுச்சேர்தல் நடைபெறுகிறது. நன்மைக்கா ஏன் கூட்டுச்சேர முடியாது?' எனும் கருத்துக்களை உள்ளடக்கமாகக் கொண்டு அவர்களது உரை அமைந்திருந்தது.
இறுதியாக இஸ்திஃபாருடன் இஜ்திமா நிகழ்வுகள் நிறைவடைந்தன.















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக