இலங்கையின் 68வது சுதந்திர தினமும் மறுசீரமைக்கப்பட வேண்டிய எமது வாழ்வொழுங்கும்.
ஓவ்வொரு மனிதனும் சுதந்திர உணர்வுடன் பிறந்துள்ளான். நிர்ப்பந்தம், பலவீனம் என்பவற்றின் காரணமாகவே அவன் பிறருக்கு அடிமைப்படும் நிலை ஏற்படுகிறது. இருந்தபோதிலும், மனிதனின் இயல்பான சுதந்திர உணர்வு அனைத்து அடிமைத் தளைகளில் இருந்தும் விடுதலை பெறும் போராட்டத்தின்பால் அவனை உந்தித் தள்ளுகிறது. எமது தாய்நாடான இலங்கை காலணித்துவ அடிமைத் தளைகளிலிருந்து விடுதலை பெற்ற 68வது ஆண்டு நிறைவினை இன்று கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இனம், மதம் போன்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி, 'தேசம்' எனும் ஒற்றைக் கொடியின் கீழ் ஒன்றுபட்டு சிந்திக்கும் தருணமாக இன்றைய தினம் அடையாளப்படுத்தப்படுகிறது.
இன்றைய உலக ஒழுங்கில் தேச எல்லைகளையும் கடந்த மனித நலன் குறித்த சிந்தனை முதன்மையானதாகும். எனினும் ஒவ்வொரு தேசத்துக்கும் இனத்துக்கும் சமூகத்துக்குத்துக்கும் உரித்தான தனித்துவமான அடையாளங்கள் மறுதலிக்கப்பட முடியாதனவாகும். ஓவ்வொரு மனிதனும் தனது தேச. சுமூக அடையாளங்கள், பண்பாடுகள், பாரம்பரியங்கள் குறித்து மகிழ்ச்சியடைவதும் அவற்றைப் பேணிப் பாதுகாக்க முற்படுவதும் இயல்பானதாகும். இத்தகைய பன்மைத்துவ அடையாளங்களைப் பேணியவாறு உலகளாவிய மனித சமூகத்தின் நலன்களைப் பேணியவாறு முன்னோக்கிப் பயணிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
அல்குர்ஆன் பின்வருமாறு இதனைத் தெளிவுபடுத்துகிறது: 'மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்து நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதற்காக உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறப்புக்குரியவர். (49:13)'
உலக மனிதர்கள் யாவரும் ஒரே தாயின் பிள்ளைகளே என்பதை வலியுறுத்திக் கூறும் அல்குர்ஆன், மனிதர்கள் மத்தியில் நிலவும் தேச, சமூக, இன வேறுபாடுகளை 'அடையாளங்கள்' என வரையறுத்து அங்கீகரிக்கிறது. ஆனால், அந்த இனத்துவ தேச அடையாளங்கள் ஒருவர் இன்னொருவரை அடக்கி ஆள்வதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படுவதை எதிர்க்கிறது. இந்த உலகளாவிய விழுமியத்தின்மீது நின்று எமது தனித்துவ அடையாளங்களைப் பேணிப் பாதுகாப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பது இங்கு வலியுறுத்திக் கூற வேண்டிய விடயமாகும்.
இலங்கை நாடு பன்மைத்துவ கலாச்சாரங்களைக் கொண்ட நாடு என்பது மறுக்க முடியாத யதார்த்தமாகும். இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் 'இலங்கையர்' என்ற அடையாளத்துடன் பெருமைப்படும் நிலை தோன்ற வேண்டுமாயின் ஒவ்வொரு இனத்துக்குமான அரசியல், சமய, கலாச்சார உரிமைகள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு சமூகமும் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என்ற அந்தஸ்தோடு பாரபட்சமற்ற உரிமைகளை அனுபவித்துக்கொண்டு தமது இனத்துவ அடையாளங்களைப் பேணியவாறு வாழும் நிலை ஏற்படுத்தப்படும்போதுதான் இந்நிலை சாத்தியமாகும். அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு உளப் பரிசுத்தத்தோடு ஒன்றிணைந்து பணியாற்றும் நிலையும் தோன்ற வேண்டுமாயின் இந்த விடயம் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.
ஓவ்வொரு சமூகமும் ஏனைய சமூகங்களையும் அவர்களது பண்பாட்டு விழுமியங்களையும் புரிந்துகொள்ளவும் அவற்றை மதிக்கவும் கற்றுக்கொள்வதோடு ஒரே தேசத்தவர்கள் என்ற அடிப்படையின்மீதும் அதனையும் தாண்டிய மனிதாபிமான உணர்வின் அடிப்படயிலும் ஏனையோரை உளமாற நேசிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், எமது நாட்டின் சுதந்திரத்துக்குப் பின்னரான அண்மைக் கால வரலாற்றைக் கற்கும் எவரும் இந்தப் புள்ளியில் நாம் தவறு செய்திருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்வார்.
நாம் அனைவரும் இலங்கையர்கள். எம்மில் எவரும் அறபியர்களோ. ஆங்கிலேயர்களோ அல்ல. இந்த உணர்வை ஒவ்வொரு சமூகமும் தன்னுள் உள்வாங்கிக்கொள்வதோடு, ஏனைய சமூகங்களையும் இதே கண்ணோட்டத்துடன் நோக்கும் நிலை தோன்ற வேண்டும். இலங்கை முஸ்லிம்களுக்கென்று தனித்துவமான மொழியும் பண்பாட்டு அடையாளங்களும் உள்ளன. அவை, இஸ்லாமிய அடிப்படையுடன் முரண்படாத நிலையில் அவற்றைப் பேணிப் பாதகாப்பது அவசியமாகும். அறபிய, வட இந்திய, பாகிஸ்தான கலாச்சாரங்களை 'இஸ்லாமிய கலாச்சாரம்' என்ற தவறான எண்ணக்கருவோடு இலங்கை முஸ்லிம் சமூகத்துக்குள் திணித்து ஏனைய சமூகங்கள் முஸ்லிம்களை வேறுபட்ட கண்ணோட்டத்துடன் நோக்கும் நிலை இனிமேலும் ஏற்படாமல் பாதுகாப்பது எமது பொறுப்பாகும்.
இஸ்லாம், உலகளாவிய சகோதரத்துவத்தையும் நீதியையும் உயர் மானிடப் பண்பாடுகளையும் வலியுறுத்தும் உன்னதமான கொள்கையாகும். அனைத்து வகையான இனத்துவ ரீதியான மற்றும் பாலியல் ரீதியான பாரபட்சங்களையும் உரிமை மறுப்புகளையும் அது எதிர்த்து நிற்கின்றது. இந்த விடயத்தை இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தவும் பாரபட்சமற்ற வகையில் அனைவரும் தமது உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்பவும் உழைக்க வேண்டியது எமது பொறுப்பாகும். எமது குழந்தைகளுக்கும் இந்த உணர்வை ஊட்ட வேண்டியது எமது கடமையாகும். ஓர் இனத்தின் அல்லது தேசத்தின் சுதந்திரம் என்பது, இன்னுமொரு இனத்தை அல்லது தேசத்தை அடக்கி ஆள்வதல்ல என்பதையும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டியதும் எமது கடமையாகும். அனைத்துவிதமான இனவாத சிந்தனைகளிலிருந்தும் பால் ரீதியான அடக்குமுறைச் சிந்தனைகளிலிருந்தும் பிற்போக்குவாதக் கருத்தியல்களிலிருந்தும் எமது எதிர்கால சந்ததியைப் பாதுகாத்து, வளமான நாட்டைக் கட்டியெழுப்ப முற்பட வேண்டும். இந்த உணர்வை இன்றைய தினத்தில் எம்முள் விதைக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக