பலதார மணம் - ஒரு சமூக உளவியல் நோக்கு
பலதார மணத்தை இஸ்லாம் ஒருபோதும் வரவேற்கவில்லை. இஸ்லாம் உலகளாவிய சமயம் என்ற அடிப்படையில் பல்வேறு கால், சமூக வழக்காறுகளையும் தேவைகளையும் அனுசரித்து கடுமையான நிபந்தனையுடன் வழங்கப்பட்ட அனுமதி மட்டுமே அது. இஸ்லாம் ஒரு பெண்ணுடன் வாழ்வதையே வரவேற்கிறது. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்கவியலாது என நீங்கள் அஞ்சினால், மற்றப் பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ மும்மூன்றாகவோ நான்குநான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்து கொள்ளலாம். (அவ்வாறு பலரைத் திருமணம் புரிந்தால் அப்போது அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு) நீங்கள் நீதமாக நடக்க முடியாது எனப் பயந்தால், ஒரு பெண்ணையே, அல்லது உங்கள் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் (அடிமைப்) பெண்ணையே (திருமணம் செய்து) கொள்ள வேண்டியது. நீங்கள் பேதம் பாராட்டாமலிருப்பதற்கு இதுவே சுலபமான முறையாகும். (திருக்குர்ஆன்: 4:3)
பலதார மணத்திற்கு அனுமதியளிக்கின்ற அல்குர்ஆன் வசனமே ஒரேயொரு மனைவியுடன் வாழ்வதைத்தான் வரவேற்கக் கூடிய சுலபமான வாழ்வொழுங்காக முன்வைக்கிறது. இலங்கை இந்திய முஸ்லிம் சமூகங்களைப் பொறுத்தவரையில் பலதார மணம் என்பது பொதுவான வழக்காறு இல்லை. அவர்களது சமூக மனப்பாங்கும் அதற்கேற்பவே வடிவமைந்துள்ளது. இங்கிருக்கின்ற ஒரு பெண், தனது கணவன் இன்னுமொரு திருமணம் செய்வதை விரும்பாமலிருப்பது, தனக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளின் மீதான அச்ச உணர்வின் வெளிப்பாடாகும். அவளினுள் கட்டமைக்கப்பட்டிருக்கும் சமூக உளவியலே இந்த உணர்ச்சி நிலைக்குக் காரணமாகும். இஸ்லாம், அதனது உயர் இலக்குகளுக்கு மாற்றமில்லாத, சமூக வழக்காறுகளை அங்கீகரித்துச் செல்லும் மார்க்கமாகும். ஒரு திருமணம் என்பதுதான் எமது நாட்டு முஸ்லிம்களின் சமூக வழக்காறாகும். அதனையே இஸ்லாமும் வரவேற்கிறது. இஸ்லாம் வரவேற்கிற ஒரு சமூக வழக்காறைத் தரம் தாழ்த்தி கடுமையான நிபந்தனைகளுடன் முன்வைக்கும் அனுமதியை சிறந்ததொரு முன்மாதிரியான வாழ்வொழுங்காக முன்வைப்பது ஏராளமான சிக்கல்களை ஏற்படுத்தும்.
எமது சமூகங்களில் நடைமுறையிலிருக்கும் சீதனக் கொடுமைக்கு மாற்றீடாக பலதார மணத்தை; தீர்வாக முன்வைப்பது, ஒரு கொடுமையிலிருந்து மற்றுமொரு உளவியல் ரீதியான கொடுமைக்குள் பெண்களைத் தள்ளிவிடுவதாக அமையும். அது பெண்களுக்கு இழைக்கப்படும் மற்றுமொரு அநீதியாகும். சமூகத்தின் பொருளாதார ஒழுங்கையும் திருமண ஒழுங்கையும் காத்திரமான வகையில் இஸ்லாத்தின் 'நீதி' எனும் உயர் விழுமியத்தை நோக்கியதாக மாற்றியமைப்தற்கான கடுமையான போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டுமே தவிர இன்னுமொரு அநீதி தோற்றமெடுக்கக்கூடிய வகையில் மத்திய கிழக்கு நாடுகளின் கலாச்சாரத்தை இங்கு திணிக்கக்கூடாது. 'ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரிடையே நீதமாக நடத்தல்' என்பதற்கு பணம் ஒன்று மட்டும் போதுமான தகுதியில்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக