பள்ளிவாயல் நிருவாகிகளும் பொருளாதாரப் பின்னணியும்.
'ஸகாத் கொடுக்காதவர்கள், கொடுக்கத் தகுதியில்லாதவர்கள் பள்ளிவாயல் நிருவாகிகளாக இருக்க முடியுமா?' என்பது ஒரு சகோதரரின் முகப் புத்தகக் கேள்வி. 'நாம இன்னும் ஸகாத் கொடுக்கத் தகுதி ஆகல்ல. அதனால நாம பள்ளி நிருவாகி ஆக முடியாது' என்பது வேறொரு சகோதரரின் கூற்று. ஸகாத் கொடுக்கும் தகுதியிலுள்ள செல்வந்தர்கள் மட்டுமே பள்ளிவாயல் நிருவாகிகளாக இருக்க முடியும் எனும் கருத்து மேலெழுந்து வருவதை அவதானிக்க முடிகிறது.
சாதாரண பொதுமக்கள் மட்டுமன்றி உலமாக்களாக அடையாளப்படுத்தப்படும் சிலரும் இந்தக் கருத்தைக் கூறுவதை அவதானிக்க முடிகிறது.
பள்ளிவாயல் நிருவாகிகளின் தகுதியைக் குறிப்பிடும் அல்குர்ஆன் 'எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து ஸகாத்தும் கொடுத்து வருவதோடு அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாமல் இருக்கிறார்களோ அவர்கள்தான அல்லாஹ்வின் மஸ்ஜித்களைப் பராமரிப்பார்கள். அவர்களே நல்வழி பெற்றவர்களில் உள்ளவர்களாக இருக்கக் கூடும்.' (அல்குர்ஆன் 9:18) என்று குறிப்பிடுகிறது. இந்த வசனம் பள்ளவாயல் நிருவாகிகள் ஸகாத் கொடுக்கும் தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை. மாறாக, பள்ளிவாயல் நிருவாகிகள் முஃமின்களாக இருக்க வேண்டும் என்பதையே குறிப்பிடுகிறது. ஓர் அல்குர்ஆன் வசனத்தை அதற்கு முன்னாலுள்ள வசனங்களுடன் இணைத்து விளங்க வேண்டிய தேவை ஏற்படலாம். இந்த வசனத்துக்கு முன்னாலுள்ள வசனம் பின்வருமாறு அமைகிறது: 'இணை வைத்து வணங்கும் இவர்கள், தாங்கள் நிராகரிப்பவர்கள்தாம் என்பதற்கு சாட்சியாக இருந்துகொண்டு அல்லாஹ்வின் பள்ளிவாயல்களைப் பராமரிக்க தகுதியற்றவர்கள். அவர்களது நற்செயல்கள் அழிந்துவிட்டன. அவர்கள் நரகத்தில் தங்கிவிடுவர். (9:17). அல்குர்ஆன் முஃமின்களை வர்ணிக்கும்போது ஈமானுடன் தொழுகையையும் ஸகாத்தையும் இணைத்துக் குறிப்பிடுகிறது. இந்த இடங்களிலெல்லாம் 'முஃமின்கள் ஸகாத் கொடுக்கும் தகுதியை அடையும்போது ஸகாத் கொடுப்பார்கள்' என்றுதான் புரிந்துகொள்கிறோம். 'எவர்கள் ஸகாத் கொடுப்பதில்லையோ அவர்கள் மறுமையை நிராகரிப்பவர்கள்தான்' (41:7) என்றும் அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. 'வாழ்நாளில் ஸகாத் கொடுக்கும் தகுதியைப் பெறாத ஏழைகள் அனைவரும் மறுமையை நிராகரிக்கக் கூடியவர்கள்' என்று யாரும் பொருள் கொள்வதில்லை. 'ஸகாத் கொடுக்கும் தகுதி இருந்தும் ஸகாத் கொடுக்காதவர்கள்தான் மறுமையை நிராகரிப்பவர்கள்' என்றுதான் பொருள் கொள்கிறோம். அதேபோன்றுதான் பள்ளிவாயல் நிருவாகி ஒருவர் தனக்கு ஸகாத் கடமையாகும் நிலையில் முறையாக ஸகாத் கொடுக்கக்கூடியவராக இருக்க வேண்டும். மாறாக ஸகாத் கொடுக்கக்கூடிய அளவுக்கு செல்வந்தராக இல்லாத ஒருவர் பள்ளிவாயலை நிருவகிக்க முடியாது என்பது அதன் பொருளல்ல.
வசதி படைத்தவர்கள் மட்டும்தான் பள்ளிவாயலை பரிபாலனம் செய்ய முடியும் என்ற கருத்து மிகப் பெரும் சமூக சீரழிவையே தோற்றுவிக்கும். இன்றைய சூழலில், நிருவாகத் துறையில் அனுபவமும் அறிவும் பெற்ற எத்தனையோ நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த படித்தவர்கள் பள்ளிவாயலை பரிபாலிக்கக்கூடிய தகுதியைப் பெற்றவர்களாக இருக்கின்றனர். செல்வத்தையன்றி கல்வியையும் இறையச்சத்தையுமே பள்ளிவாயல் நிருவாகிகளுக்கான முதல்தரத் தகுதிகளாக முன்னிறுத்த வேண்டும். ஏனெனில், 'அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவர்கள் கல்விமான்களே' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். எனவே, பள்ளிவாயலின் நிருவாகப் பொறுப்பானது சிறந்த நிருவாகத் திறனும் கல்வி அறிவும் இறையச்சமும் கொண்டவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமே தவிர, அவர்களுடைய பொருளாதாரப் பின்னணியை எந்த சந்தர்ப்பத்திலும் முதன்மைப்படுத்தக் கூடாது. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக