காத்தான்குடி சிறுவர் புத்தகக் கழகத்தின் சிறுவர் புத்தகக் கண்காட்சி
இன்றைய நிலையில் சிறுவர்களுக்கு மத்தியில் பரந்தளவிலான வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துதலென்பது பல்வேறு சவால்களைக் கொண்ட ஒரு முயற்சியாகும். பாடசாலைப் பாடப் புத்தகங்களோடு பெரும்பாலான சிறுவர்களின் வாசிப்பு சுருங்கிப் போகிறது. வணிக நோக்கிலான கல்வி நிறுவனங்கள் அவர்களைக் களைப்படைய வைத்துவிடுகின்றன. இவற்றையும் தாண்டிக் கிடைக்கின்ற ஓய்வு நேரங்களையும் இலத்திரனியல் ஊடகங்களும் மென்பொருள் விளையாட்டுக்களும் அபகரித்துக்கொள்கின்றன. இந்த நெருக்கடிகளுக்குள்ளால்தான் எமது எதிர்கால சந்ததியை, அறிவை முதல் நோக்காய்க் கொண்ட, எல்லையற்ற வாசிப்புலகை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. சிறுவர் இலக்கியங்களும் தனியான சிறுவர் வாசிகசாலைகளும் இந்த இடத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.
அண்மையில் காத்தான்குடி பொது நூலகத்தில் தனியான சிறுவர் வாசிப்பு அலகொன்று, இரவல் வழங்கும் சேவையோடு, ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். எனினும் அங்குள்ள பெருமளவான நூல்கள் பாடசாலைப் பாடத்த்திட்டத்துடன் தொடர்பானவை. பாடப் புத்தகங்கள் கல்வி பயிலும் தரத்துக்கேற்ப வகைப்படுத்தப்பட்டிருப்பது போன்று சிறுவர் இலக்கியங்கள் வயதுப் பிரிவுக்கேற்ப வகைப்படுத்தப்பட வேண்டியதும் நூலகப் பிரிவு , புதிய வருகைகளின் மூலம், தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்பட வேண்டியதும் அவசியமானதாகும்.
இந்நிலையில் நேற்றைய தினம் (07-07-2017) காத்தான்குடி மெத்தைப் பள்ளி வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள சிறுவர் புத்தகக் கண்காட்சி இந்தப் பாதையில் அழுத்தமான கால் பதித்தலாகவே தோன்றுகிறது. சிறுவர் புத்தகக் கழகம் எனும், உருவாக்க நிலையிலுள்ள, அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இக்கண்காட்சி ஒரு தனிநபர் முயற்சி என்பதை இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். இங்குள்ள நூல்கள் அனைத்தும் குறித்த சகோதரரின் சேகரிப்பாகும். காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நூல்களில் பெரும்பாலானவை சிறுவர் இலக்கியங்களாக இருந்தபோதிலும் வயது வந்தவர்களுக்கான பயனுள்ள நூல்களும் காடசிப்படுத்தப்பட்டுள்ளன. சிறுவர் இலக்கியங்களுள் பல தரமான மொழிபெயர்ப்பு நூல்களாகும். உள்ளுர் சிறுவர் இலக்கியங்கள் அரிதாகவே உள்ளன. இருப்பினும் மொத்தத்தில் கண்காட்சிக்கான நூல் சேகரிப்பு (Book Collection) சிறப்பாக உள்ளது. சிறுவர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள நூல்களை காட்சிக்கூடத்திலேயே வைத்து வாசிப்பதற்கான பிரத்தியேகமான ஆசன ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க அம்சமாகும். கண்காட்சியில் நூல்களின் பாகுபடுத்தலை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் எனத் தோன்றுகிறது. மேலும் நூல்களைத் தொடர்ச்சியாக ஒழுங்குபடுத்துவதில் தொண்டர்கள் கூடிய கரிசனை செலுத்த வேண்டும்.
தனியான, தொடர்ச்சியான இற்றைப்படுத்தலைக் கொண்ட, சிறுவர் வாசிகசாலையுடன் கூடிய சிறுவர் புத்தகக் கழகம் (Children Book Club) ஒன்றின் உருவாக்கமே கண்காட்சி ஏற்பாட்டாளரின் இலக்காக இருக்கிறது. உண்மையில் வரவேற்கத்தக்க முயற்சியாகும். இத்தோடு உள்ளூர் சிறுவர் இலக்கிய முயற்சிகளும் ஊக்குவிக்கப்பட வேண்டியிருக்கிறது. சிறுவர் புத்தகக் கழகம் காத்திரமான பணிகளை ஆற்றும் ஓர் அமைப்பாக வளரும் என எதிர்பார்க்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக