சனி, 21 அக்டோபர், 2017

இலவசக் கல்வியும் டியூஷன் நிலையங்களும் - நடைமுறைகளைப் புரிந்துகொள்ளல்


அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புக்களை வழங்கும் வகையிலேயே இலங்கையில் இலவசக் கல்வி நடைமுறையிலுள்ளது.. ஆனால், இன்றைய டியூஷன் கலாச்சாரம் இலவசக் கல்வியின் பயனுறுதியை நலிவடையச் செய்துள்ளது என்பதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். இலாப நோக்குக் கொண்ட டியூஷன் நிலையங்கள் மாஃபியாவாக உருமாற்றம் பெற்று வருவதை அண்மைய பரீட்சைக் கால சம்பவங்கள் குறித்துக் காட்டுகின்றன. கல்வியானது போட்டி நிறைந்தாகவும் பரீட்சை மையமானதாகவும் அமைந்துள்ள நிலையில், இத்தகைய தனியார் கல்வி நிலையங்கள் அத்தியாவசியமானவை என உணர வைக்கப்படுகின்றன. அரசாங்கப் பாடசாலைகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் வினைத்திறனாக இல்லாதால், டியூஷன் அவசியமானது என்ற வாதம் முன்வைக்கப்படுகிற அதே வேளை, சில பாடசாலை ஆசிரியர்களின் அசிரத்தைக்கு டியூஷன் நிலையங்கள் காரணமாகின்றன. இதற்கு மேலதிகமாக, பெரும்பான்மையாக பாடசாலை ஆசிரியர்களே டியூஷன் வகுப்புக்களிலும், கற்பிக்கிறார்கள் என்பது இன்னும் வினோதமானது.
இவ்வாறானதொரு பொறிமுறையையே டியூஷன் நிலையங்கள் கையாள்கின்றன. மிகையான டியூஷன் வகுப்புக்கள் மாணவர்களின் ஓய்வு, பொழுதுபோக்குகள், பாடசாலைப் புறக் கிருத்திய செயற்பாடுகள் என்பவற்றை மட்டுமன்றி சுய கற்றலையும் பாதிப்படையச் செய்கின்றன. மாணவர்களின் சுய வாசிப்பாற்றல், சிந்தனை விருத்தி, புத்தாக்கத் திறன், விழுமியங்கள், பண்பாட்டு நடத்தைகள் என அனைத்தையுமே பரீட்சை மையக் கல்வி முறையும் அதன் இணைச் சகோதரத்துவமான டியூஷன் நிலையங்களும் தகர்த்துவிடுகின்றன. மாணவர்களின் பரீட்சை அடைவுகளை மேம்படுத்த தவறான உத்திகள் கையாளப்படுகின்றன. சாதாரண ஆசிரியர்கள் முதல் உயர் கல்வி அதிகாரிகள் வரை அனோகமானோரின் ஒப்புதல் இதற்குக் கிடைக்கிறது. இது மாணவர்களின் உள்ளார்ந்த விருத்தியை வெகுவாகப் பாதிக்கிறது. சில டியூஷன் ஆசிரியர்கள், பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசியர்களைக் குறித்த நம்பிக்கையீனத்தினையும் எதிர்மறையான எண்ணங்களையும் மாணவர்கள் மனதில் விதைத்துவிடுகின்றனர்.. 
பாடசாலைகளில் சில பாடங்களுக்கு நிலவும் ஆசிரியர் வளப் பற்றாக்குறை டியூஷன் நிலையங்களின் இராட்சத வளர்ச்சிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திவிடுகின்றது. 
இந்த நிலையில் சில மதம் சார் அமைப்புகளும் மத போதகர்களும் "ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் பிரித்து வெவ்வேறாக வகுப்புக்களை நடத்தினால், டியூஷன் நிலையங்கள் புனிதமடைந்துவிடும்" எனப் பிரச்சாரம் செய்வதும் இந்த குறுகிய பிற்போக்கு சிந்தனையினால் ஆட்கொள்ளப்பட்ட இளைஞர்கள் டியூஷன் நிலையங்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதும் விகடமானது. 
இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்கும் அதன் விளைதிறனை அதிகரிப்பதற்குமான எத்தனங்களை மேற்கொள்வதோடு, பொருள் முதல்வாத நோக்குக் கொண்ட பரீட்சை மையமான கல்வி என்ற நிலையிலிருந்து விடுபட்டு, கல்வியை பன்முக ஆளுமையும் பண்பாட்டு நடத்தையும் கொண்ட மனிதர்களை உருவாக்குவதற்கான சாதனமாக மாற்றியமைக்க வேண்டும். ஆழ்ந்த அன்பும் அக்கறையுணர்வும் சமூகப் பார்வையும் கொண்ட ஆசிரியர்கள் இதற்கு அவசியப்படுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால், வணிக நோக்குக் கொண்டதொரு சமூகத்தில், இத்தகைய ஆசிரியர்களின் உருவாக்கம் மற்றும் நிலைத்திருப்புக்கான சாத்தியம் இழிவாகிவிடுகிறது. நீண்டகாலத் திட்டமிடலும் அறிவுப் பின்னணியும் ஆழமான பயிற்றுவிப்பும் கொண்டு சாத்தியப்படுத்தப்படும் சமூக மாற்றம் ஒன்றுக்கு சமாந்தரமாகவே இந்த மாற்றமும் நிகழ முடியும். அதற்கான முன்னெடுப்புக்கள் நிதானமாகவும் பொறுமையுடனும் வலுவாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். உணர்ச்சிவசப்பட்ட செயற்பாடுகளும் season க்கு மட்டுப்பட்ட வெள்ளி மேடைப் பிரச்சாரங்களும் எந்தப் பயனையும் தரப்போவதில்லை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக