பள்ளிவாயல் நிருவாகத் தெரிவும் இரகசிய வாக்கெடுப்பு முறையும்
பள்ளிவாயல் நிருவாகத் தெரிவு தொடர்பாக, பாரம்பரிய முறையிலிருந்து வேறுபட்ட, தேர்தல் முறை அண்மைய நாட்களில் சில பள்ளிவாயல்களில் நடைமுறைப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் எழுகின்றன. எவ்வாறான முறையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டபோதிலும் மஹல்லாவைச் சேர்ந்த ஜமாஅத்தார்களின் விருப்பினடிப்படையில் நிருவாகிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே அடிப்படை இலக்காகும். இன்றைய சூழ்நிலையில் பாரம்பரியத் தேர்வு முறையானது குறித்த இலக்கை நிறைவேற்றுவதற்கு எந்தளவுதூரம் வினைத்திறனானது என்பதே கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். சாதாரண ஒரு பொதுமகன் பகிரங்கமாக கருத்துத் தெரிவிக்க தயங்குகின்ற ஒரு சூழ்நிலை நிலவும்போதோ அல்லது பகிரங்கமாகத் தேர்வை நடத்தும்போது பிரச்சினைகள் எழுகின்ற நிலையிலோ இரகசிய வாக்கெடுப்பே பெரும்பான்மை அபிப்பிராயத்தைப் பெறுவதற்கு ஒப்பீட்டளவில் வினைத்திறனானதாகும். ஆனால், பள்ளிவாயலைப் பொறுத்தவரை இரகசிய வாக்கெடுப்பு என்பது தீண்டத் தகாத ஒரு பொறிமுறை என்ற கருத்து நிலவுகிறது.
பள்ளிவாயல் நிருவாகத் தெரிவுக்கு தேர்தலை நடத்திவிட்டதால் பள்ளிவாயலில் மேற்குலக ஜனநாயகத்தைக் கொண்டுவந்துவிட்டதாகவோ அல்லாஹ்வின் ஹாகிமிய்யத்தில் கைவைத்துவிட்டதாகவோ பதட்டப்படத் தேவையில்லை. பொது அபிப்பிராயத்தைப் பெறுவதற்கான ஓரளவு சிறந்த பொறிமுறையொன்றே இங்கு கையாளப்படுகிறது. அந்தப் பொறிமுறை யாருடைய கண்டுபிடிப்பாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சிறந்ததாகத் தோன்றும் ஒன்றைப் பயன்படுத்த ஏன் தயங்க வேண்டும்? இரகசிய வாக்கெடுப்பை விடச் சிறந்த ஒரு பொறிமுறையை யாராவது முன்வைக்க முடியுமானால், அவற்றைப் பரிசீலிக்க முடியும். ஆனால், பாரம்பரிய முறையினையே பின்பற்ற வேண்டும் என்றும் அது ஒன்றே இஸ்லாத்தின் வழிமுறை என்றும் அடம்பிடிக்க முடியாது.
பள்ளிவாயல் நிருவாகத் தெரிவுக்கு இரகசிய வாக்கெடுப்பு முறையைப் பயன்படுத்துவது தொடர்பாக முஸ்லிம்களுக்குள் இருக்கும் விமர்சனங்களுக்கு அப்பால், இஸ்லாத்தை விமர்சிக்கும் சிலரும் இஸ்லாமிய வழிமுறையான மசூறா புறக்கணிக்கப்பட்டு ஜனநாயகம் பள்ளிவாயலினுள் நுழைந்திருப்பதாக விமர்சனம் செய்கின்றனர். ஜனநாயகத்தின் எல்லா அம்சங்களும் பொறிமுறைகளும் இஸ்லாத்துக்கு விரோதமானதல்ல. 'சட்டமியற்றும் அதிகாரம்' என்ற அடிப்படை விடயத்திலேயே இஸ்லாம் முரண்பட்டு நிற்கிறது. மசூறா என்பதும் பொதுவான நடைமுறை விடயங்களில், பெரும்பான்மை அபிப்பிரயாத்தின் அடிப்படையில் அல்லது பொதுக் கருத்தினடிப்படையில், தீர்மானம் மேற்கொள்வதற்கான ஒழுங்கு மட்டுமே. மசூறாவினூடாக அடிப்படை இஸ்லாமிய சட்டங்கள், இலக்குகள் மற்றும் விழுமியங்களில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது.
நடைமுறை விடயங்களில் மசூறாவை இஸ்லாம் வலியுறுத்துகிறதே தவிர, அதற்கான பொறிமுறை தொடர்பாக எந்த இறுக்கமான சட்டதிட்டங்களையும் முன்வைக்கவில்லை. சூழ்நிலைக்கும் தேவைகளுக்கும் ஏற்றவாறும் அடிப்படை இலக்குகளை நிறைவு செய்யத்தக்கவாறும் எந்தவொரு பொறிமுறையினையும் பயன்படுத்த முடியும். இரகசிய வாக்கெடுப்பு என்பது ஜனநாயக ஒழுங்கில் பெரும்பான்மை அபிப்பிராயத்தைப் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஓரு பொறிமுறை மட்டுமே. அதே பொறிமுறையை மசூறா ஒழுங்கிலும் பொது அபிப்பிராயத்தைப் பெறுவதற்காகப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. தெளிவாகக் கூறுவதானால், இரகசிய வாக்கெடுப்பு என்பது மசூறாவுக்கான நவீன பொறிமுறையாகப் பயன்படுத்தப்படுகிறது எனலாம். பண்டைக்கால நேரடி ஜனநாயகமானது நவீன சமூக அமைப்பு மற்றும் மக்கள் தொகைக்கேற்ப, அதனிலும் சிறந்ததாகக் கொள்ள முடியாத, பிரிதிநிதித்துவ ஜனநாயகமாக மாற்றமடைந்திருக்கிறது. கால சூழலுக்கேற்ப பொறிமுறைகளில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இதுதான் மசூறாவுக்கான பொறிமுறையிலும் நடைபெறுகிறது. இங்கே பாரம்பரியமான பொறிமுறையினை விட சிறந்ததும் வினைத்திறனானதுமான பொறிமுறையே பயன்படுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இலக்குகளுக்கும் விழுமியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமேயன்றி நடைமுறைகளுக்கல்ல. இஸ்லாம் பாரம்பரியங்களையும் வழக்காறுகளையும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருக்குமாறு கூறவில்லை. அவ்வாறான எந்தத் தேவையும் இஸ்லாத்துக்குக் கிடையாது.
எல்லாப் பள்ளிவாயல்களும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் நிருவாகிகளைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஜமாஅத்தார் தொகை குறைவாகவுள்ள சிறிய பள்ளிவாயல்கள் பாரம்பரிய முறையின் மூலமே நிருவாகிகளைத் தேர்ந்தெடுக்கின்றன. இன்றைய சமூகச் சூழலில் ஜமாஅத்தார் எண்ணிக்கையும் மஹல்லா எல்லைப் பரப்பும் கூடிய பெரிய பள்ளிவாயல்களைப் பொறுத்தவரை இரகசிய வாக்கெடுப்பே பொருத்தமான பொறிமுறையாகும். அது மசூறா எனும் இஸ்லாமிய ஒழுங்கிற்கு உட்பட்டதேயாகும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக