டார்வினின் கொள்கையும் கடவுள் நம்பிக்கையும் - முரண்பாடுகளின் உண்மை நிலை
இரண்டு நாட்களுக்கு முன்னால் டார்வினின் பரிணாமக் கொள்கை தொடர்பான கட்டுரையொன்றினை முகநூலில் வாசிக்கக் கிடைத்தது. பரிணாமக் கோட்பாடு கடவுளை மறுப்பதற்கு உதவுவதால் அதனை பலரும் ஏற்றிப் போற்றுவதாகவும் அது விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் புறத்தோற்ற அவதானிப்புகளை மட்டும் வைத்தே இன்றும் கூர்ப்பு முன்வைக்கப்படுவதாகவும் உடற்கூற்றியலையோ மூலக்கூற்று உயிரியலையோ கருத்திற் கொள்வதில்லை எனவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 'ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து எவ்வாறு நீண்டது' என்பதற்கு லாமார்க் கூறிய விளக்கத்தை டார்வினிஸ்டுகளின் கருத்தாகவும் அதே பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பெரும்பாலும் மதம் சார்பாக பரிணாமக் கொள்கை எதிர்க்கப்படும்போது, குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினுள் இருந்து இந்த எதிர்ப்பு முன்வைக்கப்படும்போது, இவ்வாறான மிக மங்கலான ஒரு பார்வையினை அவதானிக்க முடிகிறது. இதற்கு அப்பால், டார்வினின் கொள்கையை கடவுள் மறுப்புக்கான கருவியாகக் கையாள முனையும் நாத்திகர்கள் சிலரும் ஓரளவு இதனையொத்த பார்வையைக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேறொரு அவதானம்.
பெரும்பாலும் மதம் சார்பாக பரிணாமக் கொள்கை எதிர்க்கப்படும்போது, குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினுள் இருந்து இந்த எதிர்ப்பு முன்வைக்கப்படும்போது, இவ்வாறான மிக மங்கலான ஒரு பார்வையினை அவதானிக்க முடிகிறது. இதற்கு அப்பால், டார்வினின் கொள்கையை கடவுள் மறுப்புக்கான கருவியாகக் கையாள முனையும் நாத்திகர்கள் சிலரும் ஓரளவு இதனையொத்த பார்வையைக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேறொரு அவதானம்.
ஏந்தவொரு கருத்தியலையும் 'ஏற்றல்' அல்லது 'மறுத்தல்' என்ற நிலைப்பாடுகளுக்கு முன்னால், அது தொடர்பான அடிப்படை அறிவைப் பெற்றிருக்க வேண்டும். விஞ்ஞானத்துடன் தொடர்பான விடயப் பரப்புகளாக இருந்தாலும் சமூகவியல் கருத்துகளாக இருந்தாலும் மதம் சார்ந்த அல்லது கலாச்சாரம் சார்ந்த விடயங்களாக இருந்தாலும் இது பொருந்திப் போகும். விமர்சனம் என்பது இந்த அடிப்படையின்மீது கட்டியெழுப்பப்படும்போதே அது வினைத்திறனானதாக அமையும். குறித்த விமர்சனம் இஸ்லாத்துடன் இணைக்கப்படும்போது மிகுந்த அவதானம் தேவைப்படுகிறது.
கூர்ப்பு அல்லது பரிணாமம் என்ற கருத்தை உலகுக்கு முதன்முதலாக முன்வைத்தவர் சார்ள்ஸ் டார்வின் அல்ல. உயிரங்கிகளின் பரிணாம வளர்ச்சி எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை 'இயற்கைத் தேர்வு' எனும் பொறிமுறையூடாக விளக்கியதே டார்வின் செய்த பணியாகும். நவீன காலத்திலேயே, சார்ள்ஸ் டார்வினுக்கு முன்னால், லார்மாக் என்பவர் முழுமைப்படுத்தப்பட்ட உயிரங்கிகளின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடொன்றை முன்வைத்திருந்தார். இவற்றுக்கு முன்னர், பண்டைய கிரேக்க தத்துவ ஞானிகளினால் பரிணாமம் தொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்ததத் தொடரில் பரிணாமக் கொள்கையை பரவலாகப் பேசியவர்கள் மத்தியகால முஸ்லிம் விஞ்ஞானிகள். இவர்களில் முன்னோடியாக இருப்பவர் அல்-ஜாஹிஸ். அதன் பின்னால் அல்-பராபி, அல்-மஸ்ஊதி, அப்னு மிஸ்கவைஹ், இப்னு சீனா, இப்னு ருஷ;த் என பலர் பரிணாமக் கோட்பாட்டை ஆதரித்திருக்கின்றனர். சார்ள்ஸ் டார்வினின் சமகாலத்தவரும் விஞ்ஞானியுமான ஜோன் வில்லியம் ட்ரப்பர், தனது "History of Conflict Between Religion and Science" எனும் நூலில் டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கையை 'முகம்மதிய பரிணாமக் கொள்கை' என்று வர்ணிக்கிற அளவுக்கு மத்தியகால முஸ்லிம் விஞ்ஞானிகளின் மத்தியில் பரிணாமக் கொள்கை செல்வாக்குப் பெற்றிருந்தது. பரிணாமக் கருத்துக்களுடன் இயற்கைத் தேர்வுக் கொள்கைக்கான அடிப்படை மூலக்கூறுகளையும் இவர்களது ஆக்கங்களில் காணக்கூடியதாக இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இவர்கள் எவருமே கடவுள் மறுப்புக் கொள்கையாக இதனை முன்வைக்கவில்லை. கடவுள் கொள்கையுடன் இணைத்தே பரிணாமத்தை அவர்கள் விளக்கியிருந்தனர். சிலர் அல்-குர்ஆனிய வசனங்களுக்கு பரிணாமத்துடன் இணைந்ததான விளக்கத்தையும் அளித்திருந்தனர். பரிணாமக் கொள்கையின் முன்னோடிகளாக இருக்கும் முஸ்லிம் விஞ்ஞானிகளில் சிலர் முஃதஸிலா சிந்தனைப் போக்குடையவர்கள் என்பது வேறு விடயம். ஆனால், கடவுள் மறுப்புக் கொள்கையாக இதனை அவர்கள் முன்வைக்கவில்லை என்பதை இங்கு அவதானிக்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கு மத்தியிலிருந்து எழும் அறிவியல் அடிப்படையற்ற டார்வினிஸ விமர்சனங்களின் பின்னணியில் இரண்டு பலவீனங்கள் இருப்பதாகத் தெரிகிறது. ஒன்று டார்வினின் கொள்கையை அதற்குரிய விஞ்ஞான மூல நூல்களில் இருந்து கற்க முற்படாமல், ஆதரவான அல்லது எதிரான விமர்சனங்களில் இருந்து மட்டுமே கற்றுக்கொள்ள முற்படல். இரண்டாவது, இஸ்லாமிய மூல நூட்களிலுள்ள விடயங்களுக்கு பாமரத்தனமான விளக்கங்களை வழங்குதல். இந்தப் பின்னணியிலேயே டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கை சமயத்துக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானதாகவும் மனித ஆன்மாவை இழிவுபடுத்தும் ஒன்றாகவும் நோக்கப்படுகிறது. தோமஸ் மால்தூசின் மனிதாபிமானமற்ற பொருளியல் கருத்துக்கள் இயற்கைத் தேர்வுக் கொள்கைக்கு தூண்டுதல் அளித்துள்ளன என்பதை மறுக்க வேண்டியதில்லை. அதற்காக 'இயற்கைத் தேர்வு மூலமான உயிரினங்களின் பரிமாணம்' எனும் மொத்தக் கொள்கையுமே மனித ஆன்மாவுக்கு எதிரானது என்று கூறத் தேவையில்லை. சார்ள்ஸ் டார்வினின் சமகாலத்தில் இயற்கைத் தேர்வுக் கொள்கையை முன்வைத்த மற்றுமொரு அறிவியலாளரான அல்பிரட் ரஸல் வாலேஸ் ஓர் ஆன்மீகவாதியாக இருந்தவர், முதலீட்டியத்தின் தீங்குகளையும் காலணித்துவத்தின் பாதிப்புகளையும் சுட்டிக் காட்டியவர், சடவாதத்திலிருந்து விலகி நின்றவர். 'மனித ஆன்மாவின் விருத்தியையும் மனிதனின் உயர் உளத் தொழிற்பாடுகளையும் விளக்குவதற்கு இயற்கைத் தேர்வுக் கொள்கை போதுமானதல்ல' எனும் கருத்தை அவர் கொண்டிருந்தார். மனித ஆன்மாவுடன் இயற்கைத் தேர்வுக் கொள்கையைப் பொருத்துவதிலுள்ள சிக்கல் நிலை அதனை முன்வைத்த விஞ்ஞானிகளில் ஒருவராலேயே உணரப்பட்டிருக்கிறது என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். மனிதனின் உயர்நிலைக்குக் காரணம் அவனது ஆன்மாவே தவிர உடலல்ல. ஆன்மீக வறுமை கொண்ட மனிதனை கால்நடைகளை விட இழிவானவனாகவே அல்குர்ஆன் வர்ணிக்கிறது.
இதற்காக டார்வினின் பரிணாமக் கொள்கையை அப்படியே விசுவாசிக்க வேண்டும் என்பதல்ல. எந்தவொரு கோட்பாடும் விமர்சிக்கப்பட முடியும். ஆனால், அதற்குரிய அறிவியல் சட்டகத்தினுள் விமர்சிக்கப்பட வேண்டும். டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கையும், அது முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்து நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை உள்வாங்கியதாக, புதுமைப்படுத்தப்பட்டே வருகிறது. இன்றைய நிலையில் பாகுபாட்டியலும் பரிணாமக் கொள்கையும் புறத்தோற்ற இயல்புகளை பிரதானமாகக் கொள்வதில்லை. உடற்கூற்றியலையும் தாண்டி மூலக்கூற்று உயிரியல்வரை பன்முகப்பட்ட அறிவியல் துறைகளைக் கருத்திலெடுக்கின்றன. விஞ்ஞானத்தின் இந்த இயங்குநிலையை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதனைப் புரிந்துகொள்ள முற்படாமல், 'குரங்கும் மனிதனும் ஒரே மாதிரி இருப்பதைப் பார்த்துவிட்டு பரிணாமக் கொள்கையை முன்வைக்கிறார்கள்' என்ற பாமரத்தனமான விமர்சனங்களை முன்வைக்கக் கூடாது. 'குரங்கிலிருந்து மனிதன் தோன்றினால், ஏன் இப்போதிருக்கும் குரங்குகளுக்கு மனிதக் குழந்தை பிறக்கவில்லை?' என்ற சில மதப் பிரச்சாரகர்களின் கேள்வி அதனைவிட சிறுபிள்ளைத்தனமானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக