திங்கள், 6 அக்டோபர், 2025

உலக ஆசிரியர் தினம் - நடைமுறைகளும் எதிர்பார்ப்புக்களும்


சர்வதேச தினங்கள் என்பவை, ஐக்கிய நாடுகள் சபை போன்ற, சர்வதேச அமைப்புகளால் உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை மையப்படுத்தவும் அறிவிக்கப்பட்ட சிறப்பு நாட்களாகும். இத்தினங்கள் ஆழமான சிந்தனைகள், கருத்தாடல்களை மையப்படுத்தியவை. ஆனால், பெரு வணிக நிறுவனங்கள் அவற்றுள் சிலவற்றை மேலோட்டமான களியாட்ட நிகழ்வுகளாகவும் கொண்டாட்டங்களாகவும் மாற்றி வைத்திருக்கின்றன. சர்வதேச ஆசிரியர் தினம்கூட இந்த வலைக்குள் சிக்கி, நுகர்வுக் கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத அம்சமாக மாறியுள்ளது. உண்மையில், உலக ஆசிரியர் தினம்  சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), UNICEF, EI ஆகியவற்றின் கூட்டிணைவில் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் வகிபாகத்தை கொண்டாடுவது மட்டுமன்றி  ஆசிரியர்கள் தமது தொழில் திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டுவதற்கு தேவைப்படும் ஆதரவு குறித்தும்,  உலகளாவிய ரீதியில் இத்தொழிலின் எதிர்காலப் பாதை குறித்தும் சிந்தித்துப் பார்ப்பதற்குமான ஒரு நாளாகவே இத்தினம் நினைவுகூரப்படுவதாக யுனெஸ்கோ அமைப்பு குறிப்பிடுகிறது.

ஆனால், இத்தகு விடயங்கள் கருத்தூன்றி உரையாடப்பட வேண்டிய இத்தினம், நுகர்வுக் கலாச்சாரத்தைத் திருப்திப்படுத்தக்கூடிய வெற்றுக் களியாட்டமாக மாறியிருப்பதற்கான காரணம் என்ன? மெய்யாகவே, அதற்குக் காரணமும் எமது கல்விக் கூடங்களும் கல்வி முறையும்தான். 'கட்டாயக் கல்விக் கூடத்தில் என்ன கற்றுத் தந்தாலும் நுகர்வுச் சமுதாயத்தைத்தான் அது உண்டாக்குகிறது. இதனை முதலில் நாம் அறிந்துகொண்டால்தான், நாம் அந்த நுகரும் கலாச்சார சமுதாயத்திற்கு அப்பால் போக முடியும்.' என்கிறார் இவான் இல்லிச்.

மகிழ்ச்சிகரமான கற்றல் அனுபவங்கள் தொடர்பாக பேசப்பட்டாலும், உபதேசங்கள் செய்யப்பட்டாலும், அதனை சாத்தியப்படுத்துவதற்கான பொறிமுறை தொடர்பில், எந்த மட்டத்திலும், கருத்தாழமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. எமது நாட்டின் கல்விப் புலத்தில், மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை,  ஒவ்வவொரு மட்டத்திலுள்ளோரும் தனது பணி குறித்த பெருமித மனநிலையில்தான் இருப்பதை அவதானிக்க முடிகிறது. பயமுறுத்தல், அச்சுறுத்தல் என்பவற்றை தமது ஆயுதமாக்கி வகுப்பறை கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் ஆசிரியர்களும் தொழில் முறை ஆசியரல்லாதோரும்கூட, தமது கற்பித்தல் வினைத்திறன் மிக்கது என்று நினைக்கிற ஒரு பரிதாப நிலையே  இருக்கிறது. பிள்ளைகளின் வயதுக்கேயுரிய குறும்புத்தனங்களைக் கூட, ஒழுக்கச் சீர்கேடுகளாகவும் திருத்தவே முடியாத நெறிபிறழ்வுகளாகவும் விம்பம் வழங்கும் கல்வி சார் பணியாளர்களின் நிலை இன்னும் பரிதாபத்துக்குரியது. 


எனவே, ஆசிரியம் தொடர்பாக சிந்திக்க வேண்டிய ஒரு நாளில், சமூகம் ஆசிரியர்களின் பிரச்சினைகள் சவால்கள் தொடர்பில் உரையாடலை ஆரம்பிக்கும் அதேவேளை, ஒவ்வொரு ஆசிரியரும் தன்னை சுய விமர்சனம் செய்வதற்கு முன்வர வேண்டும். பாடசாலைகளுக்கு மத்தியிலும் பிள்ளைகளுக்கு மத்தியிலும்,  குறிப்பாக ஒரே பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மத்தியிலும்கூட,  இருக்கும் பாரபட்சங்கள் நீக்கப்பட வேண்டும். பிள்ளைகள், பிள்ளைகளாகப் பார்க்கப்பட வேண்டும். முதன்மையாக, சமூக மட்டத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் பொருள்முதல்வாத நோக்குகளிலிருந்து கல்வி விடுவிக்கப்பட வேண்டும். அக ஒளியை ஏற்படுத்துவதும் சிந்திக்கக் கற்றுக்கொடுப்பதும் ஆன்மாவின் விருத்திக்கு வழிவகுப்பதும் சமூகத் திறன்களை வளர்ப்பதும் மனநிறைவான வாழ்க்கைக் கோலமொன்றினை கட்டியெழுப்புவதற்கான வழிகாட்டலொன்றை வழங்குவதும்தான்  கல்வியின் முதன்மையா இலக்குகள் என்ற விடயம் சமூகமயப்படுத்தப்பட வேண்டும். இவை தொடர்பான கருத்தாடல்களுக்கு இடமளிக்காத ஒரு நாளாக இத்தினம் அனுஷ்டிக்கப்படுமானால், இதனூடாக நன்மையடையப்போவது வணிக நிறுவனங்கள் மட்டுமே. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக