செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

பாடசாலைகளில் வழங்கப்படும் உடல்ரீதியான தண்டனைகளும்பாதகமான விளைவுகளும்

 

பிள்ளைகளின் ஒழுக்கமென்பது என்பது வெறுமனே பயத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படு வதில்லை. அது, பரஸ்பர மரியாதை, புரிந்துகொள்ளுதல், நேர்மறையான தொடர்புகள் என்பவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும். உடல் ரீதியான தண்டனைகள் பிள்ளைகளின் உடல், உள ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிப்பதுடன், சட்டவிரோதமானதும் ஆகும்.

கல்வி அமைச்சின் 2005/17 இலக்கமுடைய சுற்றறிக்கை மூலமும் இலங்கை தண்டனை சட்ட கோவையின் பிரகாரமும் (Penal Code Amendment Act No. 22 of 1995) சிறுவர் சாசனம் (Article 71 of the Children and Young Persons Ordinance) மூலமும் உடல் ரீதியான தண்டனைகளை வழங்குதல் தடைசெய்யப்பட்டுள்ளது. (Dr. கனகசபாபதி வாசுதேவா, 2021)

ஒழுக்க நடத்தைகளுக்கு அப்பால், சில ஆசிரியர்கள், கற்றலில் பிள்ளைகள்விடும் தவறுகளுக்காகவும் அவர்களுக்கு கடுமையான உடல் தண்டனைகளை வழங்க முற்படுகின்றனர். ஆரம்பப் பிரிவில், குறிப்பாக Key Stage 1 இலுள்ள பிள்ளைகளுக்குக்கூட, கடுமையான உடல்தண்டனைகளை வழங்கக்கூடிய ஆசிரியர்கள் இன்றைய நிலையிலும் இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இப்படியான வன்முறை நடத்தையுள்ள ஆசிரியர்கள், பாடசாலைகளில், குறிப்பாக ஆரம்ப வகுப்புகளில், கற்பிப்பதற்கு எந்த வகையிலும் தகுதியானவர்கள் அல்ல. இதனை பாடசாலை நிருவாகங்களும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

பிள்ளைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது, அவர்களின் உடல் நலனை மட்டுமல்லாது, மன ஆரோக்கியத்தையும், சமூக நடத்தையையும் கடுமையாகப் பாதிக்கிறது. உடல் ரீதியான தண்டனைகள் பிள்ளைகளிடையே அச்சம், பதற்றம், மன அழுத்தம், மற்றும் சுயமரியாதை குறைவு போன்ற உணர்வுகளை ஏற்படுத்துகின்றன. தொடர்ச்சியான தண்டனைகள் காரணமாக, பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்க்க முற்படுவதுடன், ஆசிரியர்கள் மீது வெறுப்புணர்ச்சியும் கொள்கின்றனர். இதனால், அவர்கள் கல்வி நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதைக் குறைத்து, கல்வியில் பின்தங்குகின்றனர். அதேபோன்று, பிள்ளைகள் தண்டனைக்கு அஞ்சி, ஆசிரியர்களிடம் கேள்விகள் கேட்கவோ, சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ளவோ தயங்குகின்றனர். இது அவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தடையாக அமைகிறது. மேலும், உடல் ரீதியான தண்டனை ஒரு பிள்ளையின் தன்னம்பிக்கையைச் சிதைப்பதால், புதிய விடயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வத்தைக் குறைத்துக்கொள்கின்றனர். தண்டனையின் மூலம் தீர்க்கப்படும் பிரச்சினைகள், பிள்ளைகளுக்கு வன்முறையே ஒரு தீர்வு என்ற தவறான மனநிலையை ஏற்படுத்துகிறது. இதனால், அவர்களிடையே ஆக்ரோஷமான நடத்தைகள் உருவாகக்கூடும். எதிர்காலத்தில், அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தவும், பிரச்சினைகளைத் தீர்க்கவும் வன்முறையைப் பயன்படுத்த முற்படுவர்.

எனவே, பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படுவது, குறிப்பாக ஆரம்ப வகுப்புகளில் இவ்வாறான உடல்ரீதியான தண்டனைகள் வழங்கப்படுவது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். தண்டனை மூலம் வகுப்பறை ஒழுங்குகளை நிலைநாட்ட முனையும் ஆசிரியர்கள், உண்மையில், ஆளுமைக் குறைவுள்ளவர்கள் என்தை சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும். தேவையான சந்தர்ப்பங்களில் இவ்வாறானவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தயக்கம் காட்டக்கூடாது. மாணவர்களிடையே ஒழுக்க விழுமியங்களை வளர்த்தெடுக்கவும் கற்றலில் அவர்களது ஆர்வத்தை மேம்படுத்தவுமு; பொருத்தமான வினைத்திறனான உத்திகளைக் கண்டறிவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக