செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் - வாழ்வும் படிப்பினைகளும்

பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் வாழ்வும் படிப்பினைகளும்
2013-08-19 அன்று காலை செவிகளை எட்டிய பேராசியர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களின் மரணச் செய்தி உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் உள்ளங்களை ஒருகணம் அதிரவைத்தது. இஸலாமிய பிரச்சாரக் களத்துக்குக் கிடைத்த அறிவியல் வளமாகக் கருதப்பட்ட பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களை குறுகிய காலத்திலேயே இஸ்லாமிய உலகம் இழந்துவிட்டது. இஸ்லாமியராக வாழ்ந்த ஓரிரு வருடங்களுக்குள் தான் ஏற்றுக்கொண்ட உத்தம வாழ்க்கை நெறிக்காக அவரால் ஆற்றப்பட்ட பணிகள் அளவிடற்கரியன. பிரக்ஞையுள்ள ஒவ்வொரு மனிதனும், அவரது வாழ்விலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் அதிகமுள்ளன.
பேராசிரியர் அப்துல்லாஹ் 1949ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி சென்னை பெரம்பூரில் வீராசாமி, சாரதாம்பாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். பெற்றோரால் அவருக்கு சூட்டப்பட்ட பெயர் சேசாஷலம். தனதுசொந்த ஊரில் இருந்த R.B.C.C.C பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற அவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்று அதே கல்லூரியில் 1971ல் மெய்யியல் பேராசிரியராகப் பணியில் இணைந்துகொண்டார். தொடர்ச்சியான அறிவுத் தேடலின் விளைவாக இலண்டன் ஒகஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் உளவியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றார். ஆமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம், மலேசியாவின் பெற்றோனாஸ் பல்கலைக் கழகம் என்பவற்றிலும் விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார். உளநல ஆலோசகராகவும் பணியாற்றிய பேராசிரியர் அவர்கள், 2008ம் ஆண்டு சர்வதேச மனநல மருத்துவக் கழகத்தினால் வழங்கப்படும் சிறந்த மனநல மருத்துவருக்கான விருதினையும் பெற்றுக்கொண்டார். மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிரேஷ;ட உறுப்பினர்களில் ஒருவராகவும் அவர் இருந்துள்ளார். 120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள பேராசிரியர் அவர்கள் 11 மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.
சிறந்த ஆய்வாளராகவும் பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் இலக்கியவாதியாகவும் திகழ்ந்த பேராசிரியர் அவர்கள், நடிப்புத்துறையிலும் புகழ் பெற்றிருந்தார். பெண் சிசுக் கொலை தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட 'கருத்தம்மா' திரைப்படத்தில் 'மொக்கையன்' எனும் பாத்திரத்தில் நடித்து, தனது முதலாவது படத்திலேயே தேசிய விருதினையும் பெற்றார். 'இந்தியாவில் முதல் படத்திலேயே தேசிய விருதினைப் பெற்ற முதலாவது நடிகன் நான்தான்' என அவரே ஒரு பேட்டியின்போது இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். காதலர் தினம், அழகி, ஐயா, ஆனந்தம் போன்ற திரைப்பபடங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார்.
பாரம்பரிய இந்துக் குடும்பமொன்றில் பிறந்த பேராசியர் அவர்கள், இளமைப் பருவத்திலேயே தமிழ் நாட்டின் கடவுள் மறுப்பு பகுத்தறிவுவாத சிந்தனையாளரான, தந்தை பெரியாரின் கருத்துக்களால் கவரப்பட்டு நாத்திகராக மாறினார், தனது பெயரையும் 'பெரியார் தாசன்' என மாற்றிக்கொண்டார். பின்னர் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் வழியைப் பின்பற்றி பௌத்த மதத்தைத் தழுவி 'சித்தார்த்தன்' எனப் பெயர் சூடிக்கொண்டார். டாக்டர் அம்பேத்காரின் 'த புத்தா அன்ட் ஹிஸ் தம்மா' எனும் ஆங்கில நூலை ;புத்தரும் அவர் தம்மமும்' எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்து வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் என்பவற்றில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த அன்னார் இந்து மத  அறிஞர்களுடன் விவாதங்களிலும் ஈடுபட்டுள்ளார்.
2000ம் ஆண்டு அபுதாபி சென்றிருந்த வேளையில், தனது பள்ளி நண்பரான சிராஜூதீன் என்பவரை சந்தித்தார். நாத்திகராய் இருந்த பேராசிரியரிடம் அவரது இஸ்லாமிய நண்பர் கேட்ட சில கேள்விகள், அவரது சிந்தனையைத் திருப்பிவிட்டன. 'உண்மையான கடவுள் உள்ளானா?' எனும் கேள்விக்கு விடை காணும் நோக்கில் பல்வேறு மதங்களின் கடவுள் கொள்கைகளையும் ஆராய்ந்தார். 2004ம் ஆண்டில் தனது கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தைக் கைவிட்டார். பல வருட ஆய்வின் பின்னர், இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கையே மெய்யானது எனவும் அல்-குர்ஆன் மனிதனின் வார்த்தைக் கலப்பில்லாத தூய இறை வேதம் எனவும் கண்டுகொண்டார். மெய்யியலின் ஐந்து தூண்களான தர்க்கம், அறிவாதாரம், அறிவியல், புலன் கடந்த மெய்யியல், அழகியல் ஆகியவற்றின் அடிப்படையில் அல்குர்ஆனை ஆய்வு செய்ததாக அவரே குறிப்பிடுகின்றார். நீண்ட கால சத்தியத்தைத் தேடும் பயணத்தின் இறுதியில், 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் திகதி சஊதி அரேபியாவின் ரியாத் நகரில் பத்திரிகையாளர் மாநாடொன்றைக் கூட்டி தான் இஸ்லாத்தில் இணைந்துகொண்டதை அறிவித்தார்.
'1400 ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் எழுத்து, ஒரு புள்ளி, ஒரு கமா கூட மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே வேதம், இறைவனால் நேரடியாக அருளப்பட்ட வேதம் திருக்குர்ஆன்தான்' என அவர் குறிப்பிடுகின்றார். உளவியல்துறைப் பேராசிரியரான அன்னார், அல்குர்ஆனிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டலிலும்  பொதிந்துள்ள அற்புதமான உளவியல் கருத்துக்களாலேயே பெரிதும் கவரப்பட்டுள்ளார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தோழர்களும் தமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திய உளவியல் உண்மைகள் ஒரு மலை போன்றும் தான் கற்ற உளவியலானது அந்த மலையடிவாரத்தில் முளைத்திருக்கும் ஒரு புல்லைப்போன்றும் தனக்குத் தென்படுவதாக ஓர் உரையில் அவர் குறிப்பிடுகின்றார்.
இஸ்லாத்தைத் தழுவியதன் காரணமாக பல்வேறு தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். விமர்சனங்கள் வந்தபோதும் அவற்றுக்கு அஞ்சாது துணிந்து நின்றார். 'அல்லாஹ்வின் அச்சம் உள்ளத்தில் நுளைந்த பின்னர் எல்லா அச்சங்களும் என் உள்ளத்தை விட்டும் மறைந்துவிட்டன' என ஒரு சொற்பொழிவின்போது அவர் குறிப்பிட்டார். கடவுள் மறுப்பு பகுத்தறிவுவாத சிந்தனையாளர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பேராசியரின் தலைமையில் இஸ்லாமிய அழைப்பு மற்றும் ஆய்வு மையத்தினால் 'பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா?' எனும் தலைப்பில் விவரணப் படம் ஒன்று தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதே தலைப்பில் நூல் ஒன்றையும் தொகுத்து வெளியிட்டார்.
இஸ்லாத்தைத் தழுவிய கணத்திலிருந்து இஸ்லாமியப் பிரச்சாரப் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். 'என்னைப் பொறுத்தவரை இஸ்லாத்திற்கு வெளியில் இருக்கின்ற எவரைக் கண்டாலும் இஸ்லாத்தின் செய்தியைச் சொல்ல வேண்டும். ஒருவர் பஸ்ஸைப் பிடிப்பதற்காக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில்கூட 'இறைவனைப் பற்றி அறிந்துகொண்டு ஓடு' என்று சொல்கிற அளவுக்கு அல்லாஹ் எனக்கு ஊக்கத்தைத் தந்திருக்கிறான்' என பேராசியர் அவர்கள் ஒரு நேர்காணலின்போது குறிப்பிட்டுள்ளார். தனக்கிருந்த நோயினைக்கூடப் பொருட்படுத்தாது பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு இஸ்லாமியப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார். நோய் தீவிரமடைந்தபோது மருத்துவமனையில் அனுமத்க்கப்பட்டார். 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி அதிகாலை 1.25 அளவில் சென்னை சோளிங்க நல்லூர் குளோபல் மருத்துவமனையில் தனது உலக வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்தார்.
முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் ஒவ்வோர் துறைசார் நிபுணரும் பேராசிரியரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் உள்ளது. முழுமையான வாழ்க்கைத் தத்துவமான இஸ்லாத்தை தனது துறை சார்ந்த விதத்தில் விளக்கும் ஆற்றலை பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்கள் பெற்றிருந்தார்கள். 'மனோ தத்துவத் துறையில் ஈடுபாடு கொண்டவன் என்ற வகையில் எதைப் பார்த்தாலும் உளவியல் கண்ணோட்டத்தில்தான் என்னால் பார்க்க முடியும்' எனக் கூறும் பேராசியர் அவர்கள் இஸ்லாத்தை உளவியல் கண்ணோட்டத்தில் விளக்கும் ஏராளமான உரைகளை ஆற்றியுள்ளார். சாதாரண மனிதர்களைவிட துறை சார் நிபுணர்களிடம் இஸ்லாத்தின் செய்தியைக் கொண்டு சேர்க்கும்போது அவர்கள் இஸ்லாத்திற்காக ஓயாது சேவையாற்றக்கூடியவர்களாக மாறுவர் என்பதை தன்னை உதாரணமாகக் காட்டி முஸ்லிம் சமூகத்துக்கான ஆலோசனையாக முன்வைத்த பேராசியர் அவர்கள், அதனை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான உத்திகளையும் அணுகுமுறைகளையும் சுட்டிக் காட்டினார்.
வுhழ்வியல் பிரச்சினைகள் அனைத்திற்கும் இஸ்லாம் ஒன்றே தீர்வு என்பதை அவர் உறுதியாக நம்பினார். 'வாழ்க்கையில் எத்தகைய பிரச்சினைகள் ஏற்படும் எனக் கருதினாலும் அல்லது ஏற்பட்டுவிட்டது எனத் தெரிந்தாலும் நிச்சயம்.....நிச்சயம்...நிச்சயம்... அவை ஒவ்வொன்றுக்கும் இஸ்லாத்தில் தீர்வு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.' ஏன அவர் குறிப்பிடுகிறார். இஸ்லாம் உலகை ஆளவேண்டும் எனும் அவா அவர் உள்ளத்தை நிறைத்திருந்தது. 'இந்தியாவை உண்மை இஸ்லாம் ஆளவேண்டும் எனும் அரசியல் ஆசை இருக்கிறது. இதை வெளிப்படையாக அறிவிப்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. இந்தியாவை மட்டுமல்ல முழு உலகையும் ஆட்சி செய்யத் தகுதியாக மார்க்கம் இஸலாம்தான்.' ஏன்று அவர் கூறியுள்ளார்.
இஸ்லாத்தில் மன அமைதியைக் கண்ட ஒரு மனிதராக அவரை அடையாளம் காண முடிகிறது. '(லா இலாஹ எனும்) கலிமாவின் முதல் பாதியை என்னை அறியாமலேயே சொல்லிச் சொல்லி உலகளவில் புகழ் பெற்றுவிட்டேன். இப்பொழுது எனக்குப் புகழ் வேண்டாம். மன அமைதி வேண்டும். (இல்லல்லாஹ் எனும்) அடுத்த பாதியில் அது எனக்குக் கிடைத்துவிட்டது.' ஏனும் அன்னாரின் கூற்றில் நிம்மதயைத் தேடி அலையும் மனிதர்களுக்கு நல்லதோர் பாடம் கிடைக்கிறது.
முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையின்மை தொடர்பாக அவர் பெரிதும் கவலையுற்றார். முஸ்லீம்களின் பலவீனம் தொடர்பில் வருத்தப்பட்டார். 'பிறப்பால் முஸ்லிமாக இருப்பவர்கள் இஸ்லாத்திற்கு வெளியில் இருப்பவர்களை இஸ்லாத்தின்பால் அழைப்பதில் அக்கறை செலுத்தாமல் இருப்பது ஒருபுறமிருக்க, இஸ்லாத்துக்கு வருகின்றவர்களை வழிகெடுக்கும் வகையில் நடந்துகொள்வது வேதனையாக இருக்கிறது' என்பது அவரது உள்ளத்து வேதனையின் விளைவாக வெளிப்பட்ட வார்த்தைகளாகும்.
பேராசியர் அப்துல்லாஹ் அவர்கள் மறைந்துவிட்டாலும், தனது அறிவாற்றலினாலும் ஆய்வுத் திறனாலும் இஸ்லாம் தொடர்பான அதிகமான உரைகளையும் எழுத்தாக்கங்களையும் புலமைச் சொத்துக்களாக விட்டுச் சென்றுள்ளார். இஸ்லாமியப் பணிபுரிய எத்தனிக்கும் அனைவருக்கும் நிச்சயம் அவை பயன்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ்வின் உரைகள் சில:-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக