உரை- அடையாளங்களை விட்டுச் செல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பயணம்
(காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற 2013ம் ஆண்டுக்கான இறுதி மாணவர் மன்ற நிகழ்வில் ஆற்றப்பட்ட தலைமையுரை)
எதிர்காலத் தலைவர்களின் ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளும் பயிற்சிக் களமான இவ்வரங்கிற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்பதில் இதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவன் என்றவகையில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அரங்கினைப் பயன்படுத்திக் கொள்ள நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.
நாம் படைக்கும் நிகழ்ச்சிகள் ஏனையோருக்குப் பயனளிப்பதாக அமையும்போது அது, உயர்ந்த அறமாக மாறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எமது வாழ்வானது ஏனையோருக்குப் பயனளிக்கும் வண்ணம் எம் வாழ்க்கை ஒழுங்கினை மாற்றிக்கொள்ள நாம் முற்படவேண்டும். இந்தப் பிரபஞ்சத்தில் நாம் வாழ்ந்தமைக்கான பயனுள்ள ஓர் அடையானத்தையாவது விட்டுச் செல்லும்போதுதான் அது அர்த்தமுள்ள வாழ்க்கையாக அமையும். கவிக்கோ அப்துர் ரஹ்மான் தனது கவிதைனொன்றில் பின்வருமாறு கூறினார்.
ஓர் அடையாளமும் இல்லாமல் மறைந்துபோக வெட்கப்படு – ஏனெனில்
திருடன்தான் அவ்வாறு செய்வான்.
இறைவன் தந்த வாழ்க்கை வசதிகளையும் பிரபஞ்ச வளங்களையும் பயன்படுத்திக்கொள்ளும் நாம், எமது வாழ்க்கையை சமூகத்துக்கும் பிற மனிதர்களுக்கும் பயனளிக்காத ஒரு வாழ்க்கையாக ஆக்கிக்கொள்ளும்போது திருடர்களாகவே கணிக்கப்படுவோம். எமது வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் மிகச்சிறிய காரியங்கள்கூட இறைவனிடம் உயர்ந்த நல்லறங்களாகக் கணிக்கப்படக்கூடும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'நன்மயான காரியம் எதனையும் அற்பமாகக் கருத வேண்டாம். உமது சகோதரனை மலர்ந்த முகத்துடன் பார்ப்பதாயினும் சரியே.
ஏனையோரை மலர்ந்த முகத்துடன் நோக்கும்போது அவர்களது உள்ளம் மகிழ்ச்சியடைகிறது. இது இறைவனிடம் உயர்ந்த நல்லறமாகக் கணிக்கப்படுகிறது. அதேபோன்று, ஏனையோருக்கு வருத்தம் தரக்கக் கூடிய நடத்தைகளில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் எமது இயற்கை மார்க்கம் வலியுறுத்துகிறது. மூன்று பேர் மட்டும் இருக்கும்போது, ஒருவரை விட்டுவிட்டு மற்றைய இருவரும் இரகசியம் பேசுவதைக்கூட நபியவர்கள் தடுத்தார்கள்.
எனவே எமது வாழ்வில் ஏனையோருக்குப் பயனளிக்கும் கருமங்களில் அக்கறையோடு ஈடுபடவும் மற்ற மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எம் வாழ்வொழுங்கு அமைந்துpடாமல் கண்ணுங்கருத்துமாக இருக்கவும் நாம் முற்படவேண்டும் எனக் கேட்டு எனது தலைமையுரையை நிறைவு செய்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக