திங்கள், 15 செப்டம்பர், 2014

சீமா- நீதி கோரும் கண்ணீர் ஓவியம்

மாலை நேரத்தில் திடீரெனப் பெய்த மழையின் அழகில் மெய் மறந்து துள்ளி விளையாடிக்கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. ஆனால், சற்று நேரத்துக்குள்ளால் அவளது மூச்சு அடங்கிப் போகிறது. சமூகச் சீரழிவின் இருண்ட கடதாசிகளில் அவளது வரலாறும் குறித்து வைக்கப்படுகிறது. ஊருக்குள் விட்டுவைக்கப்பட்ட மனித மிருகம் ஒன்று அந்த மழலை மலரைக் கசக்கிப் போட்டது.
பாத்திமா சீமா பாதுகாப்பற்ற ஒரு சமூகச் சூழலின் அடையாளச் சின்னமாய் மாறிப் போகிறாள். பேச முடியாமல் வாய் அடைக்கப்பட்ட நிலையில் மரணித்துப் போன அவள் நல்லோர்களின் உள்ளத்து உணர்வுகளாய் மாறி நியாயம் கேட்கிறாள். அவள் வேண்டுவதெல்லாம் 'என்னைக் கொன்ற மிருகத்தைக் கொன்று விடுங்கள்' என்பதுதான்.
குற்றம் செய்வதை வழக்கமாகக் கொண்ட ஒருவனாலேயே சீமா கொல்லப்பட்டாள். முதல் தடவையிலேயே அவன் சரியாகத் தண்டிக்கப்பட்டிருந்தால், இன்று கபடமில்லாத ஓர் இளம் சிறுமியின் வாழ்வு பறிபோய் இருக்காது, அவளது அப்பாவிப் பெற்றோரின் கனவுகள் அழிக்கப்பட்டிருக்காது.

இது சீமாவின் நிலை மட்டுமா? பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பற்ற சமூகச் சூழலால் இலங்கை போன்ற நாடுகள் தலை குனிந்து நிற்கின்றன. வன்முறைகள் அதிகரித்துச் செல்வதைத் தடுக்க முடியாமல் நாடு திணறுகிறது. இலங்கையில் சிறுவர்கள் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக கடந்த 4 வருட காலத்திற்குள் 2 இலட்சத்து 10 ஆயிரம் முறைப்பாடுகள் தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திசாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார். வருடா வருடம் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

1989 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத்தினை இலங்கை அரசானது 1991 ஆம் ஆண்டு உறுதிப்படுத்தியது. அதன் உறுப்புரை 6 பின்வருமாறு அமைகிறது: 'ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர்வாழும் உரிமை பிறப்போடு கூடியதொன்றென்பதை ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் உய்வையும் மேம்பாட்டையும் உறுதிப்படுத்தும் கடப்பாடு அரசாங்கத்தினுடையதாகும்'. மேலும், உறுப்புரை 34ல் 'விபசாரம் மற்றும் ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படல் உட்பட, பாலியல் சார்ந்த சுரண்டல் அல்லது இம்சையிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை ஒவ்வொரு பிள்ளைக்கும் உண்டு' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இவற்றை நிறைவேற்ற முடியாமலும் சிறுவர்களுக்குரிய சரியான பாதுகாப்பை வழங்க முடியாலும் இருப்பதற்கான காரணம் யாது?

குற்றங்கள் நடைபெறும்போது மட்டும் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கோருகின்ற சமூகம் காலப்போக்கில் அதனை மறந்துவிடும். மௌனித்து இருந்த, குற்றவாளிகளிகளுக்காக மனிதாபிமானம் பேசுவோர் தலையெடுப்பர். 'மரண தண்டனை கொடூரமானது என அவர்கள் குரல் எழுப்புவர். ஏந்தக் குற்றமும் இழைக்காது துடிதுடித்து இறக்கும் அப்பாவிச் சிறுவர்கள், பெண்கள், பலவீனப்பட்டோர் போன்றோரின் இறுதி நேர உணர்வுகளும் அவர்களது உறவுகள் விடும் கண்ணீரும் வாழ்விழந்தோரின் சோகமும் அத்தகைய மனிதாபிமானம் பேசுவோரின் கண்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

குற்றவாளிகளுக்காகப் பரிந்து பேசும் இவ்வாறானவர்களின் ஒரே கவலை 'நாட்டில் இஸ்லாமிய ஷரீஆ வந்துவிடும்' என்ற தமது பூச்சாண்டிக் கனவு பலித்துவிடக் கூடாது என்பதுதான். தாம் பெரும்பான்மை சமூகமாக வாழாத எந்தவொரு நாட்டிலும் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு இரந்ததில்லை. குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமது சமூகத்துக்குள்ளான ஒரு சில சிவில் வாழ்வுடன் தொடர்பான விடயங்களில் மட்டுமே தனியார் சட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய ஷரீஆ நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனர். இது இலங்கை நாட்டுக்கு மட்டும் உரிய தனியான பண்புமல்ல. மாறாக இந்தியா போன்ற நாடுகளிலும் ஒவ்வொரு சமூகப் பிரிவுகளுக்குமான தனியார் சட்டங்கள் உள்ளன.

குற்றவியல் சட்டங்களைப் பொறுத்தவரை நாட்டின் பொதுவான சட்டங்களுக்குக் கட்டுப்பட்டே முஸ்லிம்கள் வாழ்கின்றனர். முஸ்லிம் சிறுபான்மை நாடொன்றில் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என இஸ்லாமிய மார்க்கமும் முஸ்லிம்களை நிர்ப்பந்திக்கவில்லை.

ஆனால், இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களின் உன்னதத் தன்மையை முஸ்லிம்கள் மட்டுமன்றி நியாய உள்ளம் கொண்ட முஸ்லிமல்லாதோரும் உணர்ந்து வைத்துள்ளனர். இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள், பாதிக்கப்பட்டவனின் மன உணர்வலைகளின் அதே அதிர்வெண்ணுடன் பேசுகின்றன. பாதிக்கப்பட்டவனுக்கு நியாயம் கிடைக்கும் வேளை குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதிலும் இஸ்லாமிய ஷரீஆ உறுதியாக நிற்கிறது. அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது: ';அறிவுள்ள மக்களே! கொலைக்காக பழிதீர்க்கும் இவ்விதியின் மூலம் உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் இருந்து இன்று) காத்துக் கொள்ளலாம்' (2:179)

'குற்றவாளி கடுமையாகத் தண்டிக்கப்பட்டால், நாட்டிலுள்ள நற்பிரஜைகள் இயல்பு வாழ்வு வாழ்வர்' என்ற நடைமுறை யதார்த்தத்தையே அல்குர்ஆனும் குறிப்பிடுகிறது. சட்டம் கடுமையாக இருக்கும்போது ஒழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும். அதே வேளை, பாதிக்கப்பட்டவனின் மன்னிக்கும் மனப்பாங்கிற்கும் இடம் கொடுக்கப்படுகிறது. அல்குர்ஆன் இதனை பின்வருமாறு உறுதி செய்கிறது: '....இருப்பினும், (கொலை செய்த) அவனுக்கு, அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நட்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும். இது உங்கள் இறைவனிடம் இருந்து கிடைத்த சலுகையும் கிருபையுமாகும்...(2:178)
இலங்கை போன்ற ஒரு நாட்டில் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற எந்தத் தேவையும் இல்லை. பொதுவான சட்ட ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டியதே நாட்டுப் பிரஜைகள் அனைவரினதும் பொறுப்பாகும். ஆனால், நாட்டின் சட்டங்கள் குற்றங்கள் பெருகுவதைத் தடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகவும் இருக்க வேண்டும் என்பதே சமூக கலாச்சார எல்லைகளைக் கடந்து அனைத்து மக்களின் எதிர்பார்ப்புமாகும். அவ்வாறு இல்லாதபோது, சட்டத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிடும் நிலை தோன்றும்.

நாட்டின் பொதுவான சட்டத்தின் சில கூறுகள், இன்னுமொரு பண்பாட்டின் காத்திரமான நல்ல அம்சங்களை ஒத்திருப்பதில் தவறில்லை. அல்லது வேறொரு பொருத்தமான பொறிமுறையைக் கொண்டிருப்பதிலும் தவறில்லை. ஆனால், நாட்டின் குற்றவியல் சட்டங்களும் அவை நடைமுறைப்படுத்தப்படும் பொறிமுறை ஒழுங்குகளும் குற்றங்களை ஒழிப்பனவாகவும் குற்றங்களைத் தடுக்கக்கூடியனவாகவும் குற்றவாளிகளுக்கான எல்லா வகையான பாதுகாப்பு அரண்களையும் தகர்த்து விடக்கூடியளவு கடுமையானவையாகவும் இருக்க வேண்டும். அந்த சட்டம் இன, மத அடையாளங்களைக் கொண்டிருக்க வேண்டியதில்லை. சமய, இன, மத பேதங்களைக் கடந்து சமூக நோக்குடனும் நாட்டின் பொதுவான நலனைக் கருத்திற் கொண்டும் அனைவரும் இதற்காக உழைக்க வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக