இஸ்லாமியப் புதுவருடமும் இஸ்லாமிய நாட்காட்டியும்
மற்றுமொரு இஸ்லாமியப் புதுவருடம் மலர்ந்துள்ளது. இஸ்லாமிய வரலாற்றில் முக்கியமான அரசியல் சமூக மாற்றத்திற்கு வித்திட்ட உன்னதமான ஹிஜ்ரா நிகழ்வின் வயதினை அது எடுத்துக் கூறுகிறது. புதிய திட்டங்களுடனும் தியாக உணர்வுடனும் மறுமலர்ச்சிச் சிந்தனைகளுடனும் சமூகம் வழிநடத்திச் செல்லப்படவேண்டியதன் தேவையை புதிய வருடப் பிறப்பு உணர்த்தி நிற்கிறது.
உலகம் முழுவதும் பல்வேறு ஆண்டுக் கணிப்பு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவற்றுள் பெரும்பாலானவை சமயம் சார்ந்தவையாகவே காணப்படுகின்றன. சமய நம்பிக்கையற்றோர்கூட சமயச் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள ஆண்டுக் கணிப்பீட்டு முறைகளில் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது.
உலகம் முழுவதும் பல்வேறு ஆண்டுக் கணிப்பு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவற்றுள் பெரும்பாலானவை சமயம் சார்ந்தவையாகவே காணப்படுகின்றன. சமய நம்பிக்கையற்றோர்கூட சமயச் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள ஆண்டுக் கணிப்பீட்டு முறைகளில் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது.
கிரகேரியன் நாட்காட்டியானது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கத்தோலிக்கத் திருத்தந்தை மூன்றாம் கிரகேரியின் பணிப்புரைக்கமைய உருவாக்கப்பட்டதாக இருந்தும்கூட உலகில் வாழும் இலட்சக் கணக்கான சமய நம்பிக்கையற்றோர், உலக ஒழுங்கிற்கு இயைந்து செல்லும் நிர்ப்பந்தத்தில், தமது நாளாந்த அலுவல்களை இந் நாட்காட்டியை மையமாகக் கொண்டே மேற்கொள்வதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
சமய, நிர்வாக, வணிக நோக்கங்களுக்காக நாட்களை ஒழுங்குபடுத்தும் ஓர் அமைப்பே நாட்காட்டியாகும். பொதுவாக நாட்காட்டிகள் பிரபஞ்சத்தின் இயற்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும். இது சந்திரனின் சுற்றுகையாக அல்லது புவியைச் சுற்றிய சூரியனின் தோற்ற இயக்கமாக இருக்கலாம். அரிதாக வேறு வான் பொருட்களின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருக்க முடியும்.
தற்காலத்தில் வழக்கத்தில் இருக்கும் நாட்காட்டிகளைப் பின்வரும் 3 வகைகளுக்குள் உள்ளடக்கலாம்.
1. சந்திர நாட்காட்டிகள்
2. சூரிய நாட்காட்டிகள்
3. சூரிய - சந்திரநாட்காட்டிகள்
சூரிய நாட்காட்டிகள், புவிச்சுற்றுகையை அல்லது சூரியனின் தோற்ற இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் கிரகேரியன் நாட்காட்டி இவ்வாறானதாகும் சந்திர நாட்காட்டியானது, சந்திரனின் சுற்றுகையை அடிப்படையாகக் கொண்டதாகும். இரண்டு புதுச் சந்திரன்களுக்கிடையிலான காலம் இவ்வகை நாட்காட்டிகளில் ஒரு மாதமாகக் கொள்ளப்படும்.
சூரிய-சந்திர நாட்காட்டிகள் சந்திரனின் சுற்றுகையை மையமாகக் கொண்டு மாதங்களைத் தீரமானித்தபோதிலும் சூரிய ஆண்டுடன் இயைந்து செல்லும் வகையில் நெட்டாண்டுகளைக் கொண்டுள்ளன. யூதர்களால் பயன்படுத்தப்படும் ஹீப்ரு நாட்காட்டி இத்தகைய பண்பினைக் கொண்டதாகும். தற்காலத்தில் சில கிறிஸ்தவ மக்களும் இந் நாட்காட்டியினைப் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்காலத்தில் பரவலாக நடைமுறையில் இருக்கும் ஒரேயொரு தூய்மையான சந்திர நாட்காட்டி இஸ்லாமிய நாட்காட்டியாகும். புன்னிரண்டு மாதங்களைக் கொண்ட இந்நாட்காட்டியின் மாதங்கள் ஒவ்வொன்றும் சந்திரனின் சுற்றுகையைக் கொண்டே கணிக்கப்படுகின்றன. மேலும், பருவகால மாற்றங்களுடன் ஒத்துச் செல்லும் வகையில் ஆண்டுக் கணிப்பினை நகர்த்திச் செல்லும் வகையிலான 'நெட்டாண்டு' எனும் அமைப்பும் இந் நாட்காட்டியில் காணப்படுவதில்லை. முற்றிலும் இயற்கையான நாட்காட்டியாக இந் நாட்காட்டி அமைகின்றது.
ஆண்டுக் கணிப்பானது ஒவ்வொரு சமூகத்திலும் வேறுபட்ட முக்கிய நிகழ்வுகளை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன. கிரகேரியன் நாட்காட்டியின் அண்டுக் கணிப்பீடு இயேசு கிறிஸ்துவின் பிறப்பிலிருந்து ஆரம்பமாகிறது. ஹீப்ரு நாட்காட்டியின் ஆண்டுக் கணிப்பீடு யூத நம்பிக்கையின்படி உலகம் படைக்கப்பட்ட நாளில் இருந்து ஆரம்பமாகிறது. இஸ்லாமிய ஆண்டுக் கணிப்பானது நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரா நிகழ்வுடன் ஆரம்பமாகிறது. இதனாலேயே இஸ்லாமிய நாட்காட்டியானது 'அத்-தக்வீமுல் ஹிஜ்ரி' எனும் பெயரால் அழைக்கப்படுகிறது.
இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரு மாதங்களும் முஹர்ரம், ஸபர், ரபீஉல் அவ்வல், ரபீஉத் தானி, ஜூமாதுல் ஊலா, ஜூமாதல் ஆகிர், ரஜப், ஷ'உபான், ரமழான், ஷவ்வால், துல்-கஅதா, துல்-ஹஜ்' என்பனவாகும். இம் மாதங்கள் நபிகள் நாயகத்தின் பிறப்புக்கு முன்னிருந்தே அறபிகளிடம் வழக்கத்தில் இருந்த மாதங்களாகும்.
இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம் ஆகும். நபிகள் நாயகத்தின் ஹிஜ்ரா நிகழ்வு இம்மாதத்தில் நிகழவில்லை. மாறாக, இஸ்ரேலிய சமூகத்தின் முக்கிய தீர்க்கதரிசிகளுள் ஒருவரான நபி மூஸா (அலை) அவர்களின் மூலம், கொடுங்கோல் ஆட்சியில் இருந்து இஸ்ரேலிய மக்களுக்கு இறைவன் விடுதலை பெற்றுக் கொடுத்த உன்னதமான நிகழ்வு இடம்பெற்ற மாதமே முஹர்ரம் ஆகும். யூத கிறிஸ்தவ பரிபாiஷயில் இந் நிகழ்வு 'பாஸ்கா' என அழைக்கப்படுகிறது. வருடத்தின் முதல் மாதமாக இம்மாதமே அமையவேண்டும் என விவிலிய நூலும் வலியுறுத்துகிறது.
'கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம். இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாய் இருப்பதாக.'
-யாத்திராகாமம் (12:1–2)
இஸ்லாமிய நாட்காட்டியின் நாளானது சூரிய அஸ்தமனத்துடன் ஆரம்பமாகிறது. எனவே இஸ்லாமிய வழக்காற்றில் ஒரு நாளின் ஆரம்பம் இரவாகும். இஸ்லாத்தில் மட்டுமன்றி பண்டைய ஆபிரகாமிய சமூகங்களிலும் இந் நடைமுறையே இருந்துள்ளது என்பதை ஊகிக்கக்கூடியதாக உள்ளது. கிறஸ்தவ வேதாகமத்தின் ஆதியாகமம் நூலும் ஒரு நாளின் ஆரம்பம் மாலை வேளை என்பதையே சுட்டிக்காட்டுகிறது
மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு என்புது இறைவனின் கட்டளையாகும். 'வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்து அல்லாஹ்வின் பதிவேட்டில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவையாகும். இதுவே நேரான வழியாகும். (9:36) என அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.
ஆண்டுக் கணிப்பிலும் நேரத்தைத் தீர்மானிப்பதிலும் சூரியனும் சந்திரனும் பயன்படுத்தப்படுகின்றன என்பதை இறைவன் தெளிவாகக் கூறுகின்றான். 'ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (காலக்) கணிப்பீட்டையும் மேற்கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சம் தருவதாகவும் சந்திரனை ஒளியாகவும் அமைத்து சந்திரனுக்கு பல நிலைகளை ஏற்படுத்தினான்' (10:5) என அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.
இஸ்லாமிய நாட்காட்டியினை சர்வதேச ரீதியாகப் பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல் நிலைகள் எதிர்நோக்கப்படுகின்றன. மாதத்தை எவ்வாறு ஆரம்பிப்பது என்பதிலேயே இக் குழப்ப நிலை காணப்படுகிறது. பிறையினைக் கண்களால் காண்பதன்மூலமே மாதம் ஆரம்பிக்கப்பட வேண்டும்
ஒரு மாதத்தின் நாட்கள் தொடர்பாக அனேகமானோர் அறிந்துவைத்துள்ள நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி ஒன்று பின்வருமாறு அமைகிறது: 'நாங்கள் எழுத்தறிவற்ற சமுதாயமாவோம். எழுதமாட்டோம், கணிப்பீடுகளையும் மேற்கொள்ள மாட்டோம். மாதம் என்பது இப்படியும் இப்படியும் அமையும். அதாவது 29 ஆக அல்லது 30 ஆக அமையும்.' (ஸஹீஹூல் புகாரி-1913, முஸ்லிம்-1970) எழுத்தறிவற்ற, வானியல் கணிப்பீடுகளை மேற்கொள்ளத் தெரியாத ஒரு சமூகத்தை நோக்கி பிறையைப் பார்த்து மாதத்தினைத் தீர்மானிக்குமாறு நபியவர்கள் கூறுகிறார்கள். அத்தகைய ஒரு சூழலில் பிறை பிறந்துவிட்டதா என்பதை கண்களால் பார்த்து மட்டுமே தீர்மானிக்க முடியும். ஆனால் எழுத்தறிவுள்ள, வானியல் கணிப்பீடுகளைத் துல்லியமாக மேற்கொள்ளக்கூடிய அறிவையும் உபகரணங்களையும் பெற்றுள்ள ஒரு சமூகமும் அதே நடைமுறையைப் பின்பற்றவேண்டும் என்ற அவசியம் கிடையாது.
கிரகணங்களைக் கண்டால், கிரகணத் தொழுகை நடத்தவேண்டும் என்றுதான் நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்குக் கட்டளையிட்டார்கள். (புகாரி 1040, 1041, 1042, 1043, 1044) ஆனால் இன்று வானியல் அறிஞர்களின் கணிப்பீடுகளை நம்பி கிரகணம் ஏற்படுவதற்கு பல மணி நேரத்துக்கு முன்பே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடுகிறோம். வானியல் கணிப்பீடுகள் மூலம் தயாரிக்கப்பட்ட தொழுகை நேர அட்டவணையினைப் பயன்படுத்துகிறோம். இவை சுன்னாவுக்கு மாற்றமானவை என எவரும் கூறுவதில்லை. எனவே, விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ள இக்காலத்தில் விஞ்ஞானக் கணிப்பீடுகளின் மூலம் இஸ்லாமிய நாட்காட்டி அமைக்கப்படும்போது, சர்வதேச அளவில் பயன்படுத்தப்படக்கூடிய வினைத்திறனான நாட்காட்டியாக அது அமையும் என்பது உறுதியானதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக