திங்கள், 18 மார்ச், 2013

நபி(ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை

நிச்சயமாக, எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனையே நாம் புகழ்கிறோம். அவனிடமே நாம் பாதுகாப்புத் தேடுகிறோம். நம்முடைய மனோ இச்சைகளின் தீங்குகளை விட்டும்; அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறோம். அல்லாஹ் நேர்வழி காட்டியவரை வழிகெடுப்பவர் யாருமில்லை. அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிட்டவரை நேர்வழியில் செலுத்துபவரும் யாருமில்லை. அல்லாஹ்வைத் தவிர கடவுள் இல்லையென்றும் அவன் தனித்தவன் எனவும் அவனுக்கு இணையாக யாருமில்லையெனவும் நான் சாட்சி சொல்கிறேன். இன்னும், முஹம்மது(ஸல்) அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார் எனவும் சாட்சி சொல்கிறேன்.

மக்களே, என் பேச்சைக் கவனமாகக் கேளுங்கள்! இந்த வருடத்தின் பின் மீண்டும் இந்த இடத்தில் உங்களைச் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.
மக்களே, உங்களது இறைவன் ஒருவனே. தெரிந்துகொள்ளுங்கள்! எந்த அறபிக்கும் அறபி அல்லாதவரை விட எந்தச் சிறப்பும் இல்லை. (அதேபோன்று) எந்த ஓர் அறபி அல்லாதவரும் அறபியை விடச் சிறந்தவருமில்லை. வெள்ளையரை விடக் கறுப்பரோ கறுப்பரை விட வெள்ளையரோ சிறந்தவரில்லை. இறையச்சம் ஒன்றே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். உங்களில் மிகச் சிறந்தவர், அதிகம் இறையச்சம் உள்ளவர்தான்.
மக்களே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நீக்ரோ அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டாலும், அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழிநடத்தி அதனை நிலைநிறுத்தும் காலமெல்லாம், அவரது வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு ஒழுகுங்கள்.
மக்களே, இந்த மாதமும் இந்த நாளும் இந்த நகரமும் எந்தளவுதூரம் புனிதமானவையோ, அதேபோன்று உங்களது உயிர்களும் உடமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமானவை. அறிந்துகொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவரது கழுத்தை மற்றவர் வெட்டி மாய்த்துக்கொள்ளும், இறை நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்.
ஓவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே. மனமுவந்து கொடுக்கும் அன்பளிப்பு தவிர, ஒரு முஸ்லிமின் பொருள் இன்னொருவருக்கு ஆகுமானதல்ல. உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்யாதீர்கள்.
அல்லாஹ்வின் முன்னிலையில் நீங்கள் அனைவரும் ஆஜராகப் போகிறீர்கள். அப்போது அல்லாஹ், உங்களது செயல்களைப்பற்றி விசாரிப்பான். யாராவது மற்றவருடைய பொருளைப் பொறுப்பெடுத்திருந்தால், அதனை அதன் உரிமையாளரிடம் உரியமுறையில் மீள ஒப்படைத்துவிடவும்.
மக்களே, முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்களது (பணியாளர்களான) அடிமைகளின் விடயத்தில் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ளுங்கள். அவர்களை நன்கு பராமரியுங்கள். நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள். நீங்கள் அணியும் (அதே தரத்திலான) உடைகளையே அவர்களுக்கும் அணியக் கொடுங்கள்.
குறைஷpகளே, மக்கள் மறுமைக்ககான முன்னாயத்தங்களுடன் வரும்போது, நீங்கள் உலகச் சுமைகளை உங்கள் பிடரிகளில் சுமந்துகொண்டு வந்துவிடாதீர்கள். அப்போது அல்லாஹ்விடமிருந்து நான் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது.
அறியாமைக் காலத்தின் அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்பட்டுவிட்டன. அறியாமைக் காலத்தில் நிகழ்ந்த கொலைகளுக்கான பழிவாங்குதல்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுவிட்டன. முதற்கட்டமாக, நம் தரப்பில் நடந்த கொலைகளில், பனூ ஸஅது குலத்தாரிடம் பால்குடிப் பாலகனாக இருந்து ஹூதைல் குலத்தாரால் கொல்லப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனது கொலைக்கான தண்டனையை நான் தள்ளுபடி செய்கிறேன். அறியாமைக் காலத்தில் நடைமுறையில் இருந்த வட்டியும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்படுகிறது. முதற்கட்டமாக, நம்மவர் தரப்பில் கொடுக்கப்பட்டிருந்த வட்டிகளில், அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபுக்குரிய வட்டி அனைத்தும் முதலுடன் சேர்த்துத் தள்ளுபடி செய்யப்படுகின்றது.
ஓருவர் குற்றம் செய்தால், அதற்கான தண்டனை அவருக்கே வழங்கப்படும். மகனின் குற்றத்திற்காகத் தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்படமாட்டார்.
மக்களே, ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரது உரிமையை அல்லாஹ் வழங்கிவிட்டான். இனி எவரும் வாரிசுகள் எவருக்கும் மரண சாசனம் எழுதவேண்டாம். அறிந்துகொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே (சட்டபூர்வமான கணவனுக்கே) சொந்தமானது. திருமணமானவர் விபச்சாரம் செய்தால், அவர் கல்லெறிந்து கொல்லப்படவேண்டும். தன் தந்தை அல்லாதவரை தம் தந்தையெனக் கூறுபவர் மற்றும் தன் எஜமானர் அல்லாதவருடன் தன்னை இணைத்துக்கொள்பவர் ஆகியோர்மீது அல்லாஹ்வுடைய, மலக்குகளுடைய மற்றும் அனைத்து மக்களுடைய சாபமும் உண்டாவதாக. அத்தகையவர்களின் கடமையான, 'நபிலான' வணக்கங்கள் எவையும் அங்கீகரிக்கப்படமாட்டாது.
இரவலாகப் பெறப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும். பாலைப் பெற்றுப் பயனடைவதற்காக வழங்கப்பட்ட கால்நடைகள், அவற்றின் உரிமையாளர்களிடமே திருப்பிக் கொடுக்கப்படவேண்டும். கடன்கள் தீர்க்கப்படவேண்டும். இழப்பீடுகளை நிறைவேற்றும் பொறுப்பு தலைவனுக்குரியது.
மக்களே, பெண்களின் விடயத்தில் அல்லாஹ்வுக்குப் பயப்படுங்கள். அவர்களின் விடயத்தில் அக்கறையோடு நடந்துகொள்ளுங்கள். ஏனெனில், அவர்கள் உங்களது கட்டுப்பாட்டில் இருப்பவர்கள். அல்லாஹ்வின் அடைக்கலமாக அவர்களை நீங்கள் கைப்பிடித்துள்ளீர்கள். உங்கள் மனைவியரிடம் உங்களுக்கென உரிமைகள் இருப்பதுபோல், உங்கள் மனைவியருக்கும் உங்களிடமிருந்து பெறவேண்டிய உரிமைகள் இருக்கின்றன. நீங்கள் விரும்பாதவர்களை உங்களது வீட்டுக்கு அனுமதிக்காமலிருப்பதும் தங்களது கற்பைக் காத்துக்கொள்வதும் அவர்களுக்குரிய கடமைகளாகும். அவர்கள் (உண்மையாகவே) குற்றம் செய்தால், தண்டிக்கும் உரிமை உங்களுக்குண்டு. (தண்டிப்பது என்றால்) படுக்கையிலிருந்து ஒதுக்கலாம், இலேசாக காயம் வராதபடி அடிக்கலாம். அவர்கள் திருந்திவிட்டால், அன்போடு; உணவும் உடையும் (வாழ்வாதார வசதிகளும்) வழங்குங்கள். அவர்கள்மீது அக்கறையோடு நடந்துகொள்ளுங்கள். ஏனெனில், அவர்கள் உங்கள் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தோராகவும் உள்ளனர். அவர்களிடம் அதனைத் தவிர வேறெந்த உரிமையும் உங்களுக்கு இல்லை. நீங்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறியே அவர்களுடன் மணவாழ்வில் இணைந்துள்ளீர்கள்.
ஒரு பெண் தனது கணவனின் அனுமதியின்றி கணவனின் வீட்டிலுள்ள எதனையும் செலவிடக்கூடாது. அப்போது (கூட்டத்திலிருந்து) 'உணவையுமா' எனக் கேட்கப்படுகிறது. அதற்கு நபியவர்கள் 'ஆம். அதுதான் நமது செல்வங்களில் மிகச் சிறந்த செல்வம்' என்று கூறினார்கள்.
மக்களே, புரிந்துகொள்ளுங்கள்! எனது பேச்சைக் கவனமாகக் கேளுங்கள். நான் எனது பிரச்சாரத்தை உங்களிடம் எடுத்துரைத்துவிட்டேன். நான் உங்களிடம் உறுதியான ஒன்றை விட்டுச் செல்கிறேன். அது அல்லாஹ்வின் வேத(மும் எனது நடைமுறையு)மாகும். அதனை அச்சொட்டாகப் பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறமாட்டீர்கள்.
மக்களே, உங்களது மார்க்கத்தைப் பாதுகாக்கும் விடயத்தில் iஷத்தானிடம் எச்சரிக்கையாக இருங்கள். உங்களது இந்த நகரத்தில் தான் வணங்கப்படுவேன் என்கிற நம்பிக்கையை அவன் இழந்துவிட்டான். என்றாலும், அவன் மகிழ்வுறும் வண்ணம், நீங்கள் அற்பமாகக் கருதும் சில விடயங்களில் அவனுக்குக் கட்டுப்படுவீர்கள்.
மேலும், தஜ்ஜாலைப் பற்றியும் நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட எந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்துக்கு அவனைப்பற்றி எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ்(அலை) அவர்களும் அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் தோன்றிய இறைத்தூதர்களும் எச்சரிக்கை செய்துள்ளார்கள். உங்களிடையேதான் அவன் தோன்றுவான். அவனது பண்புகளில் ஏதேனும் உங்களுக்குப் புலப்படாமற் போனாலும், உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் (மூன்று முறை இதனைக் கூறுகிறார்கள்). உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். ஆனால், அவனோ வலது கண் குருடானவன். அவனது கண், முன்னே தள்ளிக்கொண்டிருக்கும் திராட்சைக் குலை போன்று இருக்கும்.
(மாதத்தின் நாட்களை முன் பின்னாக்குவது, இறை நிராகரிப்பை வளர்க்கும் செயலாகும். இதனால், நிராகரிப்பவர்கள்தான் வழிகெடுக்கப்படுவர். ஏனெனில், ஓர் ஆண்டில் அவர்கள் தாங்கள் விரும்பிவாறு மாதங்களை முன் பின்னாக்கி, அம்மாதங்களில் போர் புரிவதை ஆகுமாக்கிக் கொள்கின்றனர். மற்றோர் ஆண்டில் அதே மாதங்களில் போர் செய்வது கூடாது என்கின்றனர். தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கைக்குச் சமனாக்கி, அல்லாஹ் தடுத்துள்ள மாதங்களை ஆகுமாக்கத்தான் அவர்கள் இவ்வாறு செய்கின்றனர்.
அறிந்துகொள்ளுங்கள்! அல்லாஹ், வானத்தையும் பூமியையும் படைத்த நாளில் இருந்தவாறே இப்போதும் காலச் சக்கரம் சுழல்கின்றது. அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றில் சங்கைக்குரிய மாதங்களின் எண்ணிக்கை நான்காகும். தொடர்ந்து வரும் மூன்று மாதங்களான துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகியனவும் ஜூமாதல் ஊலாவுக்கும் ஷஅபானுக்கும் இடையில் உள்ள ரஜப் மாதமுமே அவையாகும்.
மக்களே, உங்கள் இறைவனையே வணங்குங்கள், உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள், கடமையான ஐந்து நேரத் தொழுகைகளையும் தவறாது கடைப்பிடியுங்கள், நோன்பையும் நிறைவேற்றுங்கள், மனமுவந்து ஸகாத்தையும் கொடுங்கள், அதிகாரிகளுக்குக் கட்டுப்படுங்கள், நீங்கள் சுவர்க்கம் செல்வீர்கள்.
ஓவ்வோர் இறைத்தூதரின் பிரார்த்தனையும் நிறைவேறிவிட்டன, என் பிரார்த்தனையைத் தவிர. நான் அதனை மறுமை நாளுக்காக என் இறைவனிடம் சேமித்து வைத்துள்ளேன். அறந்துகொள்ளுங்கள்! மறுமை நாளில் இறைத்தூதர்கள், தங்களது சமூகத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைவர். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக 'கவ்தர்' நீர்த் தடாகத்துக்கு அருகில் காத்துக்கொண்டிருப்பேன்.
மக்களே, எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் இல்லை. உங்களுக்குப் பின் எந்த சமுதாயமும் இல்லை. இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு (இதனை) எத்திவைக்கவும். ஏனெனில், வந்திருப்பவரை விட வந்திருப்பவரின் மூலமாக (இந்தச்) செய்தியை அறிந்துகொள்பவர், நல்ல சிந்தனையாளராக இருக்கமுடியும்.
பின்னர் நபியவர்கள் மக்களைப் பார்த்து 'மறுமை நாளில் உங்களிடம் என்னைப்பற்றி விசாரித்தால், என்ன சொல்வீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அங்கிருந்த மக்கள் ''நீங்கள் (இறைச் செய்தியைத்) தெரிவித்துவிட்டீர்கள். (உங்களது பொறுப்புக்களை) நிறைவேற்றிவிட்டீர்கள். (சமூகத்தின் மீது அக்கறையோடு நடந்துகொண்டீர்கள்' என்று சாட்சி சொல்வோம்'. என்று கூறினர். உடனே நபியவர்கள் வானத்தை நோக்கிச் சுட்டுவிரலை உயர்த்தி மக்களின் பக்கமாகக் காட்டி 'இறைவா, இதற்கு நீயே சாட்சி!' என்று மூன்று முறை கூறி உரையை நிறைவு செய்தார்கள்.
அதே இடத்தில் பின்வரும் அல்குர்ஆன் வசனங்களை இறைவன் இறக்கிவைத்தான்.
'இன்றைய நாளில், உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பூர்தத்தியாக்கிவிட்டேன். மேலும், உங்களுக்கு என் அருட்கொடைகளையும் நிறைவாக வழங்கிவிட்டேன். உங்களுக்கான வாழ்க்கை நெறியாக இஸ்லாம் மார்க்கத்தை அங்கீகரித்துவிட்டேன். (அல்குர்ஆன்- 05:03)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக