திங்கள், 6 அக்டோபர், 2025

உலக ஆசிரியர் தினம் - நடைமுறைகளும் எதிர்பார்ப்புக்களும்


சர்வதேச தினங்கள் என்பவை, ஐக்கிய நாடுகள் சபை போன்ற, சர்வதேச அமைப்புகளால் உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை மையப்படுத்தவும் அறிவிக்கப்பட்ட சிறப்பு நாட்களாகும். இத்தினங்கள் ஆழமான சிந்தனைகள், கருத்தாடல்களை மையப்படுத்தியவை. ஆனால், பெரு வணிக நிறுவனங்கள் அவற்றுள் சிலவற்றை மேலோட்டமான களியாட்ட நிகழ்வுகளாகவும் கொண்டாட்டங்களாகவும் மாற்றி வைத்திருக்கின்றன. சர்வதேச ஆசிரியர் தினம்கூட இந்த வலைக்குள் சிக்கி, நுகர்வுக் கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத அம்சமாக மாறியுள்ளது. உண்மையில், உலக ஆசிரியர் தினம்  சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), UNICEF, EI ஆகியவற்றின் கூட்டிணைவில் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் வகிபாகத்தை கொண்டாடுவது மட்டுமன்றி  ஆசிரியர்கள் தமது தொழில் திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டுவதற்கு தேவைப்படும் ஆதரவு குறித்தும்,  உலகளாவிய ரீதியில் இத்தொழிலின் எதிர்காலப் பாதை குறித்தும் சிந்தித்துப் பார்ப்பதற்குமான ஒரு நாளாகவே இத்தினம் நினைவுகூரப்படுவதாக யுனெஸ்கோ அமைப்பு குறிப்பிடுகிறது.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

பாடசாலைகளில் வழங்கப்படும் உடல்ரீதியான தண்டனைகளும்பாதகமான விளைவுகளும்

 

பிள்ளைகளின் ஒழுக்கமென்பது என்பது வெறுமனே பயத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படு வதில்லை. அது, பரஸ்பர மரியாதை, புரிந்துகொள்ளுதல், நேர்மறையான தொடர்புகள் என்பவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும். உடல் ரீதியான தண்டனைகள் பிள்ளைகளின் உடல், உள ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிப்பதுடன், சட்டவிரோதமானதும் ஆகும்.

கல்வி அமைச்சின் 2005/17 இலக்கமுடைய சுற்றறிக்கை மூலமும் இலங்கை தண்டனை சட்ட கோவையின் பிரகாரமும் (Penal Code Amendment Act No. 22 of 1995) சிறுவர் சாசனம் (Article 71 of the Children and Young Persons Ordinance) மூலமும் உடல் ரீதியான தண்டனைகளை வழங்குதல் தடைசெய்யப்பட்டுள்ளது. (Dr. கனகசபாபதி வாசுதேவா, 2021)

திங்கள், 29 மே, 2023

'கல்வியில் சமவாய்ப்பு' எனும் சிந்தனையும் சமூக மட்டத்திலான பாரபட்சங்களும்

இலங்கையில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, முறைசார் கல்வியின் அடிப்படைத் தகைமை ஒன்றினை வழங்கக்கூடிய, முக்கிய பொதுப் பரீட்சையாக நோக்கப்படுகிறது. பாரம்பரியமான பரீட்சை முறைகள் தொடர்பான எதிர்மறையான விமர்சனங்களை ஒருபுறம் வைத்துவிட்டாலும், எந்தவொரு கல்வி நடவடிக்கையும் மாணவர்களினை மையப்படுத்தியதாக அமைய வேண்டும் என்ற நவீன கல்விச் சிந்தனையினடிப்படையில், சாதாரணதரப் பரீட்சையும் மாணவர்களின் நலனை முதன்மைப்படுத்தியதாக அமைய வேண்டும். ஆனால், இன்று இப்பரீட்சையானது பாடசாலைகளின் கௌரவத்தினையும் கீர்த்தியையும் பறைசாற்றுவதற்கான கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இதன் காரணமாக சில பாடசாலைகளாலும் ஆசிரியர்களாலும் மேற்கொள்ளப்படும் நேர்மையற்ற அறம் துறந்த நடவடிக்கைகள், பாடசாலைகளுக்குள்ளேயே சமூகப் படிநிலைகளை உருவாக்கி, ஒருசில பாடசாலைகளை விளிம்புநிலைக்குத் தள்ளி தீண்டத்தகாதவர்களின் பாடசாலைகளாக மாற்றியுள்ளன.

சனி, 13 மே, 2023

மட்/மம/அந்-நாஸர் வித்தியாலயத்தின் இன்றைய நிலையும் அதிபர் உரையும்

எமது சூழலில் பாடசாலை நிருவாகமானது, முழுமையான ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் வேண்டி நிற்கின்றது. பாடசாலை நிருவாகத்தின் முக்கிய அங்கம் என்ற வகையில், அதிபரின் வகிபங்கு பாடசாலையொன்றில் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கினைக் கொண்டிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. வளர்ச்சி கண்ட பல பாடசாலைகளின் வரலாற்றில் இவ்வுண்மை பொதிந்திருப்பதைக் காணலாம். இந்தவகையில், காத்தான்குடி மட்/மம/அந்-நாஸர் மகா வித்தியாலய அதிபரின் நேற்றைய (12.05.2023) உரையும் கரிசனைக்குரியது. அதிபர் பள்ளிவாயலில் உறுதிமொழி எடுத்ததும், தனது திட்டங்கள் தொடர்பாக வெளிப்படையாக பொதுவெளியில் முன்வைப்புச் செய்ததும் கவன ஈர்ப்பைப் பெறக்கத்தக்கன.

ஞாயிறு, 22 மார்ச், 2020

தொற்றுநோய்களும் இறை நியதிகளும்

பிரபஞ்சம் சில ஒழுங்குகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. பௌதீக விதிகளும் ஒழுங்குகளும் பிரபஞ்ச வஸ்த்துக்களைக் கட்டுப்படுத்துகின்றன. அல்குர்ஆன் பின்வரும் விடயத்தைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

وخلق كل شيء فقدره تقديرا
ஓவ்வொன்றையும் படைத்த இறைவன் அதற்குரிய விதிகளையும் ஒழுங்குகளையும் நிர்ணயித்தியிருக்கிறான். பல்வேறு இடங்களில் அல்-குர்ஆன் இதனை சுட்டிக் காட்டுகிறது.

لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون
'சூரியன் சந்திரனை நெருங்க முடியாது. இரவு பகலை முந்த முடியாது. ஒவ்வொன்றும் தமது ஒழுக்குகளில் நீந்துகின்றன'

செவ்வாய், 21 நவம்பர், 2017

டார்வினின் கொள்கையும் கடவுள் நம்பிக்கையும் - முரண்பாடுகளின் உண்மை நிலை


இரண்டு நாட்களுக்கு முன்னால் டார்வினின் பரிணாமக் கொள்கை தொடர்பான கட்டுரையொன்றினை முகநூலில் வாசிக்கக் கிடைத்தது. பரிணாமக் கோட்பாடு கடவுளை மறுப்பதற்கு உதவுவதால் அதனை பலரும் ஏற்றிப் போற்றுவதாகவும் அது விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் புறத்தோற்ற அவதானிப்புகளை மட்டும் வைத்தே இன்றும் கூர்ப்பு முன்வைக்கப்படுவதாகவும் உடற்கூற்றியலையோ மூலக்கூற்று உயிரியலையோ கருத்திற் கொள்வதில்லை எனவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 'ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து எவ்வாறு நீண்டது' என்பதற்கு லாமார்க் கூறிய விளக்கத்தை டார்வினிஸ்டுகளின் கருத்தாகவும் அதே பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
பெரும்பாலும் மதம் சார்பாக பரிணாமக் கொள்கை எதிர்க்கப்படும்போது, குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினுள் இருந்து இந்த எதிர்ப்பு முன்வைக்கப்படும்போது, இவ்வாறான மிக மங்கலான ஒரு பார்வையினை அவதானிக்க முடிகிறது. இதற்கு அப்பால், டார்வினின் கொள்கையை கடவுள் மறுப்புக்கான கருவியாகக் கையாள முனையும் நாத்திகர்கள் சிலரும் ஓரளவு இதனையொத்த பார்வையைக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேறொரு அவதானம். 

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

பள்ளிவாயல் நிருவாகத் தெரிவும் இரகசிய வாக்கெடுப்பு முறையும்


பள்ளிவாயல் நிருவாகத் தெரிவு தொடர்பாக, பாரம்பரிய முறையிலிருந்து வேறுபட்ட, தேர்தல் முறை அண்மைய நாட்களில் சில பள்ளிவாயல்களில் நடைமுறைப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் எழுகின்றன. எவ்வாறான முறையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டபோதிலும் மஹல்லாவைச் சேர்ந்த ஜமாஅத்தார்களின் விருப்பினடிப்படையில் நிருவாகிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே அடிப்படை இலக்காகும். இன்றைய சூழ்நிலையில் பாரம்பரியத் தேர்வு முறையானது குறித்த இலக்கை நிறைவேற்றுவதற்கு எந்தளவுதூரம் வினைத்திறனானது என்பதே கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். சாதாரண ஒரு பொதுமகன் பகிரங்கமாக கருத்துத் தெரிவிக்க தயங்குகின்ற ஒரு சூழ்நிலை நிலவும்போதோ அல்லது பகிரங்கமாகத் தேர்வை நடத்தும்போது பிரச்சினைகள் எழுகின்ற நிலையிலோ இரகசிய வாக்கெடுப்பே பெரும்பான்மை அபிப்பிராயத்தைப் பெறுவதற்கு ஒப்பீட்டளவில் வினைத்திறனானதாகும். ஆனால், பள்ளிவாயலைப் பொறுத்தவரை இரகசிய வாக்கெடுப்பு என்பது தீண்டத் தகாத ஒரு பொறிமுறை என்ற கருத்து நிலவுகிறது.

சனி, 21 அக்டோபர், 2017

இலவசக் கல்வியும் டியூஷன் நிலையங்களும் - நடைமுறைகளைப் புரிந்துகொள்ளல்


அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புக்களை வழங்கும் வகையிலேயே இலங்கையில் இலவசக் கல்வி நடைமுறையிலுள்ளது.. ஆனால், இன்றைய டியூஷன் கலாச்சாரம் இலவசக் கல்வியின் பயனுறுதியை நலிவடையச் செய்துள்ளது என்பதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். இலாப நோக்குக் கொண்ட டியூஷன் நிலையங்கள் மாஃபியாவாக உருமாற்றம் பெற்று வருவதை அண்மைய பரீட்சைக் கால சம்பவங்கள் குறித்துக் காட்டுகின்றன. கல்வியானது போட்டி நிறைந்தாகவும் பரீட்சை மையமானதாகவும் அமைந்துள்ள நிலையில், இத்தகைய தனியார் கல்வி நிலையங்கள் அத்தியாவசியமானவை என உணர வைக்கப்படுகின்றன. அரசாங்கப் பாடசாலைகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் வினைத்திறனாக இல்லாதால், டியூஷன் அவசியமானது என்ற வாதம் முன்வைக்கப்படுகிற அதே வேளை, சில பாடசாலை ஆசிரியர்களின் அசிரத்தைக்கு டியூஷன் நிலையங்கள் காரணமாகின்றன. இதற்கு மேலதிகமாக, பெரும்பான்மையாக பாடசாலை ஆசிரியர்களே டியூஷன் வகுப்புக்களிலும், கற்பிக்கிறார்கள் என்பது இன்னும் வினோதமானது.

சனி, 8 ஜூலை, 2017

காத்தான்குடி சிறுவர் புத்தகக்  கழகத்தின் சிறுவர் புத்தகக் கண்காட்சி


இன்றைய நிலையில் சிறுவர்களுக்கு மத்தியில் பரந்தளவிலான வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துதலென்பது பல்வேறு சவால்களைக் கொண்ட ஒரு முயற்சியாகும். பாடசாலைப் பாடப் புத்தகங்களோடு பெரும்பாலான சிறுவர்களின் வாசிப்பு சுருங்கிப் போகிறது. வணிக நோக்கிலான கல்வி நிறுவனங்கள் அவர்களைக் களைப்படைய வைத்துவிடுகின்றன. இவற்றையும் தாண்டிக் கிடைக்கின்ற ஓய்வு நேரங்களையும் இலத்திரனியல் ஊடகங்களும் மென்பொருள் விளையாட்டுக்களும் அபகரித்துக்கொள்கின்றன. இந்த நெருக்கடிகளுக்குள்ளால்தான் எமது எதிர்கால சந்ததியை, அறிவை முதல் நோக்காய்க் கொண்ட, எல்லையற்ற வாசிப்புலகை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. சிறுவர் இலக்கியங்களும் தனியான சிறுவர் வாசிகசாலைகளும் இந்த இடத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

பள்ளிவாயல் நிருவாகிகளும் பொருளாதாரப் பின்னணியும்.


'ஸகாத் கொடுக்காதவர்கள், கொடுக்கத் தகுதியில்லாதவர்கள் பள்ளிவாயல் நிருவாகிகளாக இருக்க முடியுமா?' என்பது ஒரு சகோதரரின் முகப் புத்தகக் கேள்வி. 'நாம இன்னும் ஸகாத் கொடுக்கத் தகுதி ஆகல்ல. அதனால நாம பள்ளி நிருவாகி ஆக முடியாது' என்பது வேறொரு சகோதரரின் கூற்று. ஸகாத் கொடுக்கும் தகுதியிலுள்ள செல்வந்தர்கள் மட்டுமே பள்ளிவாயல் நிருவாகிகளாக இருக்க முடியும் எனும் கருத்து மேலெழுந்து வருவதை அவதானிக்க முடிகிறது.